சம்பளப் பாக்கியை தரக்கோரி பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்கள் பட்டை நாமமிட்டுப் போராட்டம்!

சம்பளப் பாக்கி உள்ளிட்ட கோரிக்கைகைகள் வலியுறுத்தி நெல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்கள் நெற்றியில் பட்டை நாமம் இட்டபடி போராட்டத்தில் பங்கேற்றனர். 

பட்டை நாமம் இட்டு போராட்டம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் இவர்களுக்கு கடந்த தீபாவளிக்கான போனஸ் தொகை வழங்கப்படவில்லை. அத்துடன், கடந்த 3 மாத காலமாக இந்த ஒப்பந்த பணியாளர்களின் சம்பளத்தையும் நிர்வாகம் வழங்காமல் இழுத்தடிப்புச் செய்து வருகிறது. இதனால் ஒப்பந்த ஊழியர்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். 

மூன்று மாத சம்பளம் கிடைக்காததால் குடும்பத்தை நடத்த முடியாத அளவுக்கு நிலைமை இருப்பதாக தொழிலாளர்கள் குமுறுகிறார்கள். இதனால் கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில், சம்பளம் கிடைக்காததால் அதனை எதிர்கொள்ள அச்சத்துடன் இருப்பதாகவும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பரிதாபத்துடன் தெரிவிக்கின்றனர். அதனால் தங்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழக தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பாக நெல்லை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் 8-ம் நாளாக பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராஜகோபால், செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், மாவட்ட துணைச் செயலாளர் பிச்சுமணி, அமைப்புச் செயலாளர் செல்லதுரை, போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மரியசூசை அந்தோணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பி.எஸ்.என்.எல் போராட்டம்

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள், தங்கள் கழுத்தில் கோரிக்கை அட்டைகளை அணிந்தபடி கோஷங்களை எழுப்பினார்கள். அத்துடன், நெற்றியில் பட்டை நாமம் அடித்தபடியே போராட்டத்தில் பங்கேற்றனர். அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், தங்களுடைய போராட்டத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தவும் போராட்டக் குழுவினர் முடிவு எடுத்துள்ளனர்.    
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!