Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

கவிஞர் சமயவேல், எழுத்தாளர் ராஜ்கௌதமனுக்கு ‘விளக்கு விருது’!

Chennai: 

2016-ம் ஆண்டுக்கான ‘விளக்கு விருது’கள், கவிஞர் சமயவேலுக்கும் எழுத்தாளர் ராஜ்கௌதமனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கவாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினால் இந்த விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நினைவாக இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக இந்த விருது வழங்கப்டுகிறது. பிரமிள், சி.சு.செல்லப்பா, பூமணி, ஞானக்கூத்தன், அம்பை போன்ற தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கவிஞர் சமயவேல்

இந்த விருதைப் பெறவிருக்கும் கவிஞர் சமயவேல், கரிசல் மண்ணின் வெள்ளந்தி வாழ்வை கவிதைகளின் வழியே கடத்திய கவிஞர். இவர் தனது எளிமையான கவிதைகளினூடாக மனித வாழ்வின் தவிப்பை, உன்னதங்களைப் பேசியவர். `காற்றின் பாடல்'  என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு, தமிழ்க் கவிதை உலகில் பரவலாகப் பாராட்டப் பெற்ற நூல். `உலகம் எதையும் பிதற்றட்டும்... பசித்தவர்களின் பக்கமே என்றும் நானிருப்பேன்' என்ற அவரது வரிகளே அவரது படைப்பின் ஆன்மா. 

`நேசம் விதைத்த காட்டில்

நெருப்பு முளைத்தாலும்

பிடுங்கி எறிந்துவிட்டு

உழுது விதை விதைப்பேன்'.

 

`இவ்வளவுக்குப் பிறகும்

நான் இந்த பூமியில்

இருக்கத்தான் விரும்புகிறேன்

அதுதான் என் சாராம்சம்.'

 

`தள்ளிவிடப்பட்ட டம்ளர்

அரைவட்டில் உருள்கிறது

காற்று தொடும்போதெல்லாம்

சந்தோஷமாய்!'

போன்ற உன்னதமான வரிகளுக்குச் சொந்தக்காரரான கவிஞர் சமயவேலிடம் விருது குறித்துக் கேட்டோம்...

“பொதுவாக நான் விருதுகளால் சலனப்படுவது கிடையாது. இருந்தாலும், இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி. அதுவும் என்னுடைய முன்னோடிகளான தேவதேவன், தேவதச்சன் போன்றோர் வரிசையில் எனக்கும் கிடைக்கவிருப்பதை நினைக்கும்போது மகிழ்வாக எண்ணுகிறேன்.

`விளக்கு விருது' என்பது, தேர்ந்த இலக்கிய வாசிப்பாளர்களால் வழங்கப்படுகிறது. இதுவரை இவர்கள் அளித்த விருதுகளும் தமிழின் மிக முக்கியமான ஆளுமைகள். விருதுகள், எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தக்கூடியவை. தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்கள் மிகவும் சிரமத்துக்கிடையேதான் எழுதிவருகிறார்கள். பொருளாதார நிலையில் அவர்கள் பலமிழந்தே காணப்படுகின்றனர். அமெரிக்காவில் கோடிக்கணக்கில் பரிசுத்தொகை அளிக்கும் அமைப்புகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில், அரசின் சார்பில் இலக்கியம் சார்ந்த விருதுகள் வழங்குவதே பெரிய விஷயம். எழுத்தாளர்களை அங்கீகரிக்கும்விதமாக, இலக்கியத்துக்கும் முக்கியத்துவம் தர அரசு முயலவேண்டும். என்னைத் தேர்ந்தெடுத்த தேர்வுக் குழுவுக்கும் விளக்கு அமைப்பினருக்கும் மனமார்ந்த நன்றி.''

விளக்கு விருதுவிளக்கு விருது பெறவிருக்கும் மற்றோர் எழுத்தாளர் ராஜ்கௌதமன், தமிழின் முக்கியமான ஆய்வாளர். பேராசிரியராகப் பணியாற்றிய இவர், மனிதகுலத்தின் நீட்சி குறித்தான கோட்பாட்டு ஆய்வுகளை மேற்கொள்பவர். இவரது `சிலுவைராஜ் சரித்திரம்' மிக முக்கியமான படைப்பிலக்கியம். நம் சமூக அமைப்பை, பண்பாட்டுரீதியாகவும் வாழ்வுமுறை சார்ந்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எழுதியுள்ளார். அவரது `அறமும் அதிகாரமும்', `கலித்தொகைப் பாடல்: ஒரு விளிம்பு நிலை நோக்கு', `சிலுவைராஜ் சரித்திரம்' ஆகியவை மிக முக்கியமான நூல்கள். இவர் எழுதிய தலித் வாழ்வியல் குறித்த கட்டுரைகளும் ஆய்வுகளும் கவனம் பெற்றவை.

சார்லஸ் டார்வினின் `The Origin of species' உள்ளிட்ட பல கோட்பாட்டு நூல்களை, தமிழ் மொழிக்குக் கொண்டுவந்தவர். பல ஆய்வு நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். அவரிடம் `விளக்கு விருது' குறித்துக் கேட்டோம்.

“விருதுகள்மீது எனக்கு எப்போதுமே பெரிய அபிப்பிராயம் இல்லை. நான் செய்யும் எழுத்துப்பணி, ஆய்வுப்பணி என்பது முழுக்க முழுக்க  மக்கள் நலன் சார்ந்தே இருக்கும். பிறப்பின் வழியே அங்கீகாரம் நிர்ணயிக்கப்படும் நிலையில் அங்கீகாரத்தின் மீதான ஈர்ப்புகள் வருவதில்லை. தமிழில் இன்று பரவலாக பல ஆய்வு நூல்கள், கோட்பாட்டு நூல்கள் வெளிவருகின்றன. அவற்றில் சில குறிப்பிடும்படியாகவும் உள்ளன. ஆனால் தமிழ், இந்தியா எனக் குறிப்பிட்ட குழு சார்ந்தவையாக இல்லாமல் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கான படைப்புகள் வரவே நான் விரும்புகிறேன்" என்றார்.

‘விளக்கு விருது’ பெறவுள்ள இந்த இரு ஆளுமைகளுக்கும் நம் வாழ்த்துகள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement