மலேசியாவில் காணாமல் போன மகனை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மனு..!

மலேசியாவில் இருந்து ஊர் திரும்ப இருந்த நிலையில் காணாமல் போன மகனைக் கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குல்சார் பீவி - தாஜுதீன் தம்பதியினரின் மகன் முகம்மது யாசீன். இவர் மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலம் பட்டர்வொர்த்த் என்ற ஊரில் உள்ள பல்பொருள் அங்காடியில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஆனந்தூரில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி விசா பெர்மிட்டினை ரத்து செய்து விட்டு விமானம் மூலம் இந்தியா திரும்ப இருந்தார்.

விமான நிலையம் வருவதற்காக கடந்த 21-ம் பட்டர்வொர்த்திலிருந்து பேருந்தில் கிளம்பிய முகம்மது யாசீன் மறுநாள் காலை கோலாலம்பூர் வந்துவிட்டதாக தனது தாயாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பின் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. விமான நிலையத்திற்கும் வந்தததாக தகவல் இல்லை. இதையடுத்து மலேசியாவில் உள்ள உறவினர்கள் மூலம் முகம்மது யாசீன் காணாமல் போனது குறித்து மலேசிய போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த குல்சார் பீவி, தனது மகன் மலேசியாவில் காணாமல் போனது குறித்து மலேசிய போலீஸாரிடம் புகார் அளித்து 12 நாட்கள் ஆன நிலையில் இதுவரை தனது மகனை பற்றிய விவரம் தெரியவில்லை எனவும், தனது மகனை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய அரசு மூலமாக ஏற்பாடு செய்யவேண்டும் எனக்கோரி மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியிடம் மனு அளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!