வெளியிடப்பட்ட நேரம்: 23:56 (03/01/2018)

கடைசி தொடர்பு:00:00 (04/01/2018)

தினகரனை கண்டுகொள்ளக் கூடாது! அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு பழனிசாமி உத்தரவு

அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று காலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் எல்.எல்.ஏ.,களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

AIADMK

வருகின்ற 8-ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன், முதல் முறையாக கலந்துக்கொள்ளவிருக்கிறார்.  கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார். கூட்டத்தொடரில், ஒகி புயல் சீரமைப்பு பணிகள், உள்ளாட்சி தேர்தல் தாமதம், திட்டப்பணிகள் குறித்த கடும் விவாதங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதை எவ்வாறு கையாள்வது, கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லுவது என்பது குறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சட்டசபை கூட்டத்தொடரில் எந்த எம்.எல்.ஏ வும் விடுப்பு எடுக்காமல், கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு, சாதுர்யமான வார்த்தைகளால் விடையளிக்கவேண்டும். அதற்காக பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வேறு யாரையும் கண்டுகொள்ளாதீர்கள்" என்று எம்.எல்.ஏ.க்களிடம் கூறியுள்ளார். இதில், “வேறு யாரையும் கண்டுகொள்ளாதீர்கள்” என்று டி.டி.வி தினகரனைத் தான் மறைமுகமாக சொல்லியுள்ளார் முதல்வர் பழனிசாமி.
முதல்வரை தொடர்ந்து பேசிய துணைமுதல்வர பன்னீர்செல்வம் "ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவியது போல் இனி வரும் தேர்தலில் தோல்வியை தழுவக்கூடாது. ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும், டி.டி.வி. தினகரன் புதிதாக எம்.எல்.ஏ.வாகி சட்டசபைக்கு வருவதால் பல பிரச்னைகளை பற்றி கண்டிப்பாக பேசுவார். அதனால் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள்  முக்கியமாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.