வெளியிடப்பட்ட நேரம்: 01:16 (04/01/2018)

கடைசி தொடர்பு:01:16 (04/01/2018)

ராமநாதபுரம் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

 ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் அருகே உள்ள அரசரடிவண்டல் கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் அருகே மதுக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் அரசரடிவண்டல் கிராமத்தில் அரசு மதுபானக்கடை ஒன்று உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் மதுக்கடைகள் இல்லாத பகுதிகளை சேர்ந்தவர்களும், அரசரடிவண்டல் பகுதியைச் சேர்ந்தவர்களும் இந்த மதுபானக்கடையில் மது குடித்து விட்டு சமூக விரோத சம்பவங்களில் ஈடுபடுவதாலும், வீண் பிரச்னைகளுடன் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுதாலும் இந்த மதுபானக்கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாகவும், கிராம மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தியும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் சிவசெல்வராஜ், ரவிச்சந்திரன் மற்றும் அரசரடிவண்டல் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தினை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் துவக்கி வைத்தார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அரசரடிவண்டல் கிராம மக்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.