செல்ஃபி எடுக்கும்போது வைகையாற்றில் தவறி விழுந்த சிறுவனின் உடல் எலும்புக்கூடாக மீட்பு! 

மதுரையில் கடந்த டிசம்பர் மாத துவக்கத்தில் வைகையாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட சமயம் ,ஆற்றின் அருகே செல்ஃபி எடுத்துக்கொண்டருந்த இரண்டு சிறுவர்கள் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். அதில் ஒருவன் கரையின் ஓரமாக இருந்ததால் நீரின் வேகத்தை தாக்குப்பிடித்து, அக்கம்பக்கத்தினரால் உடனடியாக காப்பாற்றப்பட்டுள்ளான்,ஜெயசூர்யா என்ற சிறுவன் மட்டும், ஆக்ரோஷமான வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான் .இந்தச் சம்பவத்தால் மதுரையே பரபரப்பானது. இந்தச் சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களுக்கு மும்முரமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. பல கோணங்களிலும் விசாரணை,தேடுதல் நடைபெற்றது.சிறுவன் கிடைக்கவில்லை.

இச்சம்பவம் உண்மையா வதந்தியா என மக்களே குழம்பினர்.சில நாட்களுக்கு பிறகு மக்கள் இதை மறந்துவிட, சிறுவன் விழுந்து தொலைந்த  இடம் சுற்றுலா தலமாக மாறியது. அந்த சிறுவன் கடைசியாக செல்ஃபி எடுத்த அதே இடத்தில் பலரும் செல்ஃபிக்களை எடுத்துக்கொண்டருந்தனர். தேடுதல், விசாரணை கிடப்பில் போடப்பட்டது. தற்போது ஆற்றில் நீர் வற்றி பழையபடியே வைகை வறண்ட வைகையானது. கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக பல்வேறு வதந்திகள் அச்சிறுவனைப்பற்றி வலம் வந்த நிலையில், வேதனை தாங்காத பெற்றோர், மகன் எப்படியாவது கிடைத்துவிடுவான் என்ற நம்பிக்கையில் சில தினங்களுக்கு முன் ஆட்கொணர்வு மனு ஒன்றை  நீதிமன்றத்தில் அளித்துள்ளனர். இதை,நீதிபதி அவசர வழக்காக எடுத்து விசாரிக்க, இன்று சிறுவனின் உடல் சிலைமான் அருகே வைகையாற்றின்கரை அருகில்,அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'வைகையாற்றில் தடுப்புச்சுவர் கூட கிடையாது,தண்ணீர் திறந்து விடுவதற்கு முன் எங்களுக்கு முறையான எந்த அறிவிப்பும் இல்லை,திடீரென தண்ணீரை திறந்துவிட்டனர். அதைத்தொடர்ந்து ஆற்றில் விழுந்த சிறுவனை தேடக்கூட முறையான உபகரணங்கள் இல்லை. சிறுவனின் உடல் இவ்வளவு தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் அதிகாரிகளின் அலட்சியத்தால் நேர்ந்தவை'என அக்கம்பக்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!