ரஜினியின் அரசியல் பற்றி கருத்துகூற அ.தி.மு.கவில் புதிய குழு! அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

சிவகங்கை அருகே சூரக்குளத்தில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு மணி மண்டபத்தில் வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,காதி மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் ,மாவட்ட ஆட்சியர் லதா போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்.

விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு,  “மக்களின் நலனுக்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி அடுத்த சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழகம் முழுவதும்  ரூ.102 கோடி நிதி ஒதுக்கி அனைத்து மாவட்டங்களிலும் மணிமண்டபம் கட்டி பெருமைப்படுத்தியவர் ஜெயலலிதா. வீரத்தாய் வேலுநாச்சியாருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வழக்கமாக நடைபெறக்கூடியது. ரஜினியின் அரசியல் பிரவேசம் மற்றும் அரசியல் விமர்சனக் கருத்து கூறுவதற்கென்று தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அது பற்றி நான் கருத்து கூற இயலாது” என்றார்.

பிறந்த  நாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை அரண்மனையில் ரத்ததானம் நடைபெற்றது. பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் ரத்ததானம் கொடுத்து துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர்  ரத்தம் வழங்கினார்கள். டாக்டர் விமலா தலைமையிலான மருத்துவக்குழுவினர் இப்பணிகளைச் செய்தனர். இதில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான், மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!