வெளியிடப்பட்ட நேரம்: 01:48 (04/01/2018)

கடைசி தொடர்பு:01:48 (04/01/2018)

கன்னியாகுமரியை அதிர வைத்த இரட்டைக் கொலை! கஞ்சா வியாபாரி நண்பருடன் கழுத்தறுத்து படுகொலை

கொலை

கன்னியாகுமரி மாவட்டம் சீதப்பால் சால்வேஷன் ஆர்மி தெருவை சார்ந்தவர்  புனேஷ் மணி. பிரபல கஞ்சா வியாபாரி. இவருக்கு சூர்யா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். புனேஷ் மணி மீது ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, கோட்டார் காவல் நிலையங்களில் சுமார் 16-க்கும் மேற்பட்ட பல குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் கோட்டார் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று ஜாமீனில் 10 நாட்களுக்கு முன்பு  தான் இவர் வெளியே வந்துள்ளார்.

புனேஷ் மணி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் 2 குண்டாஸ் தண்டனை வழக்கு, பூதப்பாண்டி காவல் நிலையத்தில் ஒரு குண்டாஸ் வழக்குகளில் கைதாகி தண்டனை பெற்றுள்ளார். கடைசியாக கோட்டார் காவல் நிலையத்தில் கைதாகி குண்டாஸ் தண்டனை பெற்றுள்ளார். இவரை வழக்கு விசாரணைக்கு போலீஸார் தேடும் போதெல்லாம் சீதப்பால் மலையில் சென்று மறைந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

புனேஷ் மணி இரண்டு நாட்களுக்கு முன்பு வடசேரி, அருகுவிளையை சேர்ந்த ஷாஜி  என்பவருடன் சுமார் 7 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. வீட்டில் உள்ளவர்கள் வழக்கம் போல் தேடியுள்ளனர். மறுநாள்காலையிலும் வீட்டுக்கு வராததால் புனேஷ் மணியின் மாமா, அவர் வழக்கமாக இருக்கும் சீதப்பால் மலையில் உள்ள பாறைப் பகுதியில் சென்று பார்த்தார் அப்போது புனேஷ் மணியும், ஷாஜியும் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பார்த்துள்ளார். அதன்பின்  அவர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தார். நாகர்கோவில் டி.எஸ்.பி. கோபி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெயலெட்சுமி, பென்சாம், சாம்சன், பர்ணபாஸ் மற்றும்  உதவி ஆய்வாளர்கள் அருளப்பன், ஜாண் கென்னடி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

புனேஷ் மணி கழுத்து பாதிக்கும் மேல் அறுக்கப்பட்டும், ஷாஜி பின்னந்தலையில் கடுமையான வெட்டுகளுடனும் பிணமாகக் கிடந்தனர். ஷாஜியின் கை விரல் துண்டாக்கபட்டு இருந்தது. போலீஸார்  உடல்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மலையின் அடிவாரத்தில்  நின்ற பைக்கும் கைப்பற்றப்பட்டுள்ளது.  இந்த இரட்டைக் கொலை பற்றி  போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க