வெளியிடப்பட்ட நேரம்: 02:09 (04/01/2018)

கடைசி தொடர்பு:17:00 (09/07/2018)

காவல்துறை அதிகாரியைக் கண்டித்து களமிறங்கிய வருவாய்த்துறையினர்!

பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியரை மிரட்டிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் வருவாய்த்துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் கடந்த 1-ம் தேதி அன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவின் போது, பணியில் ஈடுபட்டிருந்த கீழக்கரை வட்டாட்சியர் ஆ.கணேசனை தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி கொலை மிரட்டல் விடுத்த ஏ.டி.எஸ்.பி.வெள்ளைத்துரை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

அப்போது அங்கு வந்த மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரியை முற்றுகையிட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் செயல் குறித்து விளக்கம் அளித்ததுடன் நடவடிக்கையும் எடுக்கவும் வலியுறுத்தினர்.மேலும் இதே கோரிக்கையினை வலியுறுத்தி புதன்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ளிருப்பு வேலைநிறுத்தத்திலும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். வட்டாட்சியரை மிரட்டிய ஏ.டி.எஸ்.பி வெள்ளைத்துரை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.