வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (04/01/2018)

கடைசி தொடர்பு:08:15 (04/01/2018)

நள்ளிரவில் மது கொடுக்காததால் தகராறு...! மதுக்கூடத்தை சூறையாடிய 7 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் நொச்சிப்பாளையம் பிரிவு அருகே உள்ள மதுபானக்கூடத்துக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் வந்து மதுபாட்டில்கள் கேட்டுள்ளனர். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் அவர்களைத் திட்டி அனுப்பியதால், வெளியே வந்த நபர்கள், அந்த மதுக்கூடத்தின் கதவை கோபமாக உதைத்துள்ளனர். உடனே வெளியே வந்த மதுபானக்கூட ஊழியர்கள், அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த உடையாளி, ராஜேஷ் மற்றும் நவீன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இரு தரப்புக்குமிடையே கடுமையான வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அதில் 3 பேரையும் மதுபானக்கூட ஊழியர்கள் தாக்கியிருக்கிறார்கள். காயமடைந்த ராஜேஷ் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், திடீரென நேற்று சம்பந்தப்பட்ட மதுபானக்கூடத்துக்குள் புகுந்த சுமார் 30 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த பொருள்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி சூறையாடியது. இச்சம்பவம்குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக மதுபானக்கூடத்துக்கு வந்து அங்கிருந்த நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் பிடிபட்டவர்கள் அனைவரும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்றும், முந்தைய தினம் மதுபானக்கூடத்தில் கைகலப்பில் ஈடுபட்ட ராஜேஷின் தூண்டுதலால்தான் மதுபானக்கூடத்தைச் சூறையாடியதாகவும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை சசிக்குமார், ஜெரால்டு ஃப்லிப், சிவக்குமார், ஜெகதீஷ், நவீன், சரவணக்குமார், முருகன் உட்பட 7 பேரை கைதுசெய்திருக்கிறார்கள்.