வெளியிடப்பட்ட நேரம்: 02:53 (04/01/2018)

கடைசி தொடர்பு:07:57 (04/01/2018)

பல்லடம் அருகே கார் விபத்து.. 4 பேர் படுகாயம்!

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள அரசூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், குப்பாத்தாள், திரிலோகசுந்தரி மற்றும் சம்பத்குமார் ஆகிய 4 பேர் அரசூரில் இருந்து கிளம்பி காரில் பல்லடம் நோக்கி வந்துகொண்டு இருந்தனர். கார் காளிவேலாம்பட்டி பிரிவு என்ற பகுதியைக் கடக்கும்போது, எதிர்திசையில் கோவை நோக்கி வந்துகொண்டு இருந்த சரக்கு வேன் ஒன்றின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.  இதில் காரில் பயணித்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். கார் முற்றிலுமாக சேதமடைந்தது.

அப்பகுதியில் இருந்தவர்கள், விபத்தில் சிக்கிய கோவிந்தராஜ், குப்பாத்தாள், திரிலோகசுந்தரி மற்றும் சம்பத்குமார் ஆகிய நால்வரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கே அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக பல்லடம் காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.