இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற சின்னமுட்டம் மீனவர்கள்!

கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில், மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகத்தைத் தங்கு தளமாகக் கொண்டு 236 விசைப்படகுகள்மூலம் மீனவர்கள் மீன்பிடித்துவருகின்றனர். தினந்தோறும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் செல்லும் மீனவர்கள், இரவு 9 மணி முதல் கரை திரும்ப வேண்டும். ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி தர வேண்டும் என்று, மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு இந்தப் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், அதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. காலையில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீன் வளத்துறை அலுவலகத்தில் டோக்கன் பெற்றுதான் கடலுக்குச் செல்ல வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த நவம்பர் மாதம் முதல் சின்ன முட்டம் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதன்பின், ஒகி புயல் பாதிப்பு காரணமாகவும்  மீனவர்களின் படகுகள் சேதமடைந்து கடலுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்களின் வலையில் விலை உயர்ந்த மீன்கள் சிக்கும் என்பதால், கேரளா உள்பட வெளி மாவட்ட வியாபாரிகளும் சின்ன முட்டம் துறைமுகத்துக்கு வரத்தொடங்கியிருக்கிறார்கள். இதனால், சின்ன முட்டம் துறைமுகம் மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!