கன்னியாகுமரியில் துறைமுகத் திட்டத்துக்கு நாளுக்கு நாள் வலுக்கும் எதிர்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் இனயம் பகுதியில் அமையவிருந்த  பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையத் துறைமுகம், தற்போது கோவளம் - கீழமணக்குடி பகுதியில் அமைக்கப்பட உள்ளது. அதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கன்னியாகுமரியில் நடைபெற்ற துறைமுக எதிர்ப்புக் கூட்டத்தில், 15 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், சரக்குப் பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு இயக்கத் தலைவர் பார்த்தசாரதி  தலைமையில், நிர்வாகிகள் கலெக்டரைச் சந்தித்து மனு கொடுத்தனர். அதில், கோவளம் கீழமணக்குடி பகுதியில் கோவில்விளை,  கிண்ணிக்கண்ணன் விளை, முகிலன் குடியிருப்பு, கோப்புவிளை, இலந்தையடிவிளை, நரியன்விளை போன்ற கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் துறைமுகம் அமையப் பெற்றால், இங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் .

அதனால், இந்தப் பகுதியில் துறைமுகம் அமையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனு கொடுத்தபின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது,  “இனயம் பகுதியில் அமையவிருந்த பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்றுத் துறைமுகம், தற்போது கோவளம் கீழமணக்குடி பகுதியில் அமைக்கப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைக்க, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடமிருந்து ஒப்பதல் பெற்று, இனயம் பகுதியில் துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், துறைமுகம் எங்கள் பகுதியில் வரக் கூடாது என அங்குள்ள மீனவர்களும் பங்குத் தந்தைகளும் பலவித போராட்டங்களை நடத்தினார்கள். இதன் காரணமாக இனயம் துறைமுகம் கைவிடப்பட்டு, குமரி மாவட்டத்தில் வேறு இடங்களை ஆய்வு செய்தனர். தற்போது, கன்னியாகுமரியின் கோவளம் பகுதியில் துறைமுகத் திட்டத்துக்கான ஆய்வு நடைபெற்றது. இதை, அங்குள்ள பொதுமக்கள் எதிர்த்தனர். அங்குள்ள மீனவர்கள் பல ஆலோசனைக் கூட்டங்களையும் போராட்டங்களையும் நடத்திவருகின்றனர்.

இதனால், துறைமுக எதிர்ப்புக் குழு ஒன்றை உருவாக்கி, அதன் அடிப்படையில் அங்குள்ள மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். குமரி மாவட்டத்தில், கோவளம் மற்றும் கீழமணக்குடி இடையே 200 முதல் 600 மீட்டர் வரை ஆறு ஊர்கள் இருக்கின்றன. இந்த பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம், ஊர்களுக்குத் தெற்கே அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திட்டத்தால் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பெரிய பாதிப்பு வரும் எனவும், விவசாயங்கள் அழிந்துவிடும்”  என்றும் தெரிவித்தனர்.

சரக்குப் பெட்டக மாற்று முனையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பச்சைத் தமிழகம் தலைவர் சுப.உதயகுமாரன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம், விஞ்ஞானி லால்மோகன் போன்ற பலர் குரல் எழுப்பிவருகிறார்கள். ஆனால், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., ஆஸ்டின் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!