வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (04/01/2018)

கடைசி தொடர்பு:11:09 (04/01/2018)

தனிமையில் வந்த 80 வயது ஆச்சிக்கு நேர்ந்த சோகம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில், சமீபகாலமாக பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் முதியவர்கள் மயங்கிவிழுந்து மரணம் அடையும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இதை நேரில் பார்ப்பவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் புதுக்கோட்டை நகரில் உள்ள அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்தில், 80 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் இறந்துக்கிடந்தார். அடையாளம் தெரியாத அவரை, நகர காவல்துறையினர் நல்லடக்கம் செய்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் அடுத்த சோகம் நடந்திருக்கிறது. பொன்னமராவதி  பேருந்து நிலையத்தில், 80 வயதுடைய மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்து சில நிமிடங்களில் இறந்துபோனார். அருகில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள், அவர் இறந்துவிட்ட
விஷயம் தெரியாமல், அருகிலிருந்த டீக்கடையில் தண்ணீர் வாங்கி பாட்டியின் முகத்தில் தெளித்திருக்கிறார்கள்.

இன்னொருவர், சோடா ஒன்றை வாங்கிவந்து, பாட்டி மயக்கம் தெளிந்ததும் குடிக்கக்கொடுக்கலாம் என்று காத்திருந்தார். ஆனால், தண்ணீர் முகத்தில் தெளித்தும் எந்த அசைவும் இல்லாமல் இருக்கவே, மூதாட்டி இறந்த விஷயம் புரிந்திருக்கிறது. உடனடியாக, பொன்னமராவதி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன், பேருந்து நிலையத்துக்குச் சென்று பார்த்தார். தகவல்  அறிந்து அங்கு வந்த சிலர், மூதாட்டியை அடையாளம் தெரிந்து, அவருடைய விவரங்களை முத்துக்கருப்பனிடம் தெரிவித்திருக்கின்றனர். இது தவிர, மூதாட்டி தன்னுடன் வைத்திருந்த பையில் மொபைல் போன் ஒன்று இருந்திருக்கிறது. அதை வைத்து பாட்டியின் உறவினர்களை உடனடியாக வரவழைத்த முத்துக்கருப்பன், உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

"அந்தப் பாட்டி பொன்-புதுப்பட்டி கிராமத்தில் உள்ள தேர்முட்டி வீதியைச் சேர்ந்தவர். பெயர் அழகம்மை ஆச்சி . 80 வயது ஆகிறது. ஆச்சி  தன் உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக பஸ்ஸுக்கு காத்திருந்தபோது, திடீரென  மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். நல்லவேளையாக பாட்டியிடம் மொபைல் போன் இருந்தது. அதைவைத்து பாட்டியின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தோம்" என்றவர், "வயதானவர்களைத் தனியாக ஊருக்கோ, கடைவீதிக்கோ அனுப்பாதீர்கள். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது. எங்கு சென்றாலும் துணைக்கு ஒருவரை அனுப்பிவையுங்கள்" என்ற வேண்டுகோளுடன் முடித்தார் முத்துக்கருப்பன்.