திருவானைக்காவல் அகிலாவும்.. ஸ்ரீரங்கம் ஆண்டாளும்! - குஷியில் கோயில் யானைகள்

யானை

கோவையில், இன்று யானைகள் புத்துணர்வு முகாம்  தொடங்க இருக்கிறது. இந்த முகாமில் கலந்துகொள்வதற்காக, தற்போது வரை 20-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமுக்கு வந்துசேர்ந்துள்ளன. இன்னும் வந்துகொண்டே இருக்கின்றன.

வருடம் முழுக்க கோயில்களில் காலத்தைக் கழிக்கும் யானைகளுக்கு, புதியதோர் அனுபவத்தைக் கொடுப்பதற்காகவும் புத்துணர்ச்சியூட்டுவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் யானைகள் புத்துணர்வு முகாம். முதுமலையில் நடத்தப்பட்ட யானைகள் முகாம், கோயில் யானைகளை முதுமலைக்குக் கொண்டுசெல்வதில் ஏற்பட்ட சிரமத்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையத்துக்கு மாற்றப்பட்டது. இப்போது, மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் முகாம் நடக்கிறது.

33 யானைகள் கலந்துகொள்ளும் இந்த முகாம், 48 நாள்கள் நடக்க உள்ளது. தொடங்குவதற்கு முதல் நாளே முகாம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. 17-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துவிட்டன. முகாமுக்குள் நுழைந்ததும், ஒவ்வொரு யானையிடமும் அளவில்லா மகிழ்ச்சியைக் காணமுடிகிறது. எல்லா கோயில் யானைகளும் ஒரே இடத்தில் கூடியதால், அவை செம குஷியில் இருக்கின்றன. ஒரு யானை இன்னொரு யானையை தும்பிக்கையால் தழுவி பாசம் பாராட்டுவது, மண்ணை அள்ளிப் போட்டு விளையாடுவது, உடம்பை வளைத்து நெளித்து நடனமாடுவது  என முகாம் ஆரம்பிப்பதற்கு முன்பே புத்துணர்ச்சி பொங்கிவழிய ஆரம்பித்துவிட்டது. அதிலும் ஸ்ரீ ரங்கம் ஆண்டாளும் திருவானைக்காவல் அகிலாவும் விடாமல் ஒன்றுக்கொன்று மாறிமாறி கொஞ்சிக்கொண்ட அழகு, அங்கு இருந்தவர்களை உருகவைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!