``ஒகி புயல் விஷயத்தில் அரசு தோல்வி அடைந்துள்ளது..!” மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு கண்டனம்

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், குமரி மாவட்டத்தில், ஒகி புயல்  பாதிப்புகளைக் கண்டறிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர், ஒகி புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். அதைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு தேசியத் தலைவர் பேராசிரியர் மார்க்ஸ், நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது,``கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 222 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை.

அதனால், மீனவர்களின் குடும்பங்கள் பெரும் சோகத்தில் உள்ளன. புயலில் சிக்கி இறந்துபோன மீனவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மாயமான மீனவர்களுக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சான்றிதழ் வழங்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. சான்றிதழ்மூலம் கால அவகாசத்ந்த் தளர்த்தி, உடனடியாக தமிழக அரசு நிவாரணத்தை வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெலிபேட் அமைக்க வேண்டும். மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். 

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அதுபோல அதிகமான விவசாயிகள் ரப்பர், தென்னை வாழை, மரங்களை இழந்து வாடுகிறார்கள். நான்கு வழிச் சாலைக்காக அரசு நிலம் கையகப்படுத்தும்போது இழப்பீடு வழங்கியதுபோல விவசாயிகளுக்கும் ஒகி புயல் பாதிப்பு இழப்பீடுகளை வழங்க வேண்டும். பழங்குடி மக்கள் மலைகளில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கும் மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் தொடர்ந்து வழங்க வேண்டும். இயற்கைப் பேரிடர் முன்னெச்சரிக்கை மீட்பு நடவடிக்கைகளில் அரசு தோல்வி அடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை தேசியப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அதற்காக, எங்களுடைய அறிக்கையை  விரைவாக மத்திய மாநில அரசுகளுக்கு வழங்குவோம்'' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!