வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (04/01/2018)

கடைசி தொடர்பு:08:00 (04/01/2018)

மாயமான கன்னியாகுமரி மீனவர்கள் 6 பேர் அந்தமானில் கரை ஒதுங்கியதாகத் தகவல்! மீட்க நடவடிக்கை

கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி வீசிய ஓகி புயலின்போது, கடலுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல்போனார்கள். அவர்களை கப்பல்கள் விமானங்களைக்கொண்டு தேடியபோதிலும்  பெரும்பாலானவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீனவர்களின் 89 விசைப்படகுகளைக்கொண்டு தேடும் பணியும் நிறைவுற்றது. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து படகுகளும் கரைக்குத் திரும்பிவிட்டன. சுமார் 223 மீனவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுபோல, அவர்கள் சென்ற 13 நாட்டுப் படகுகள் மற்றும் 20 விசைப்படகுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒகி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களின் டி.என்.ஏ சாம்பிள், திருவனந்தபுரம் ராஜூவ் காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பயோ டெக்னாலஜி மூலம் நடத்தப்படுகிறது.

காணாமல் போனவர்களின் குடும்பத்தினரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டு, விவரங்கள் சரியாகப் பொருந்தும் பட்சத்தில், உடல்கள் ஒப்படைக்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில்,  கன்னியாகுமரி மாவட்டம்  மற்றும் கேரளாவிலிருந்து கடலுக்குச் சென்று காணாமல்போன மீனவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்; எங்கேயாவது கரை சேர்ந்திருப்பார்கள்; மீண்டும் கரை தேடி வந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையில் பலர் கடலைப் பார்த்தபடியே இருக்கின்றனர். தற்போது, குமரிமாவட்டம் வள்ளவிளைப் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள், அந்தமான் பகுதியில் கரை ஒதுங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜன் என்பவர், ஒகி புயலின்போது கடலில் மாயமானார். அவர் இறந்துவிட்டார் என்று அவரது குடும்பம் நம்பிக்கொண்டிருந்த நிலையில், திடீரென அவரது மகள் பிரியாவை செல்போனில் தொடர்புகொண்டு, வள்ளவிளையைச் சேர்ந்த ஆறு மீனவர்களுடன் நாங்கள் அந்தமானில் உயிரோடு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். உடனடியாக இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பிரியா முயற்சித்தும் லைன் கிடைக்கவில்லையாம். இந்தத் தகவலை அந்தப் பகுதி பங்குத் தந்தைமூலம் தெரிவித்து, அவர்களை மீட்டு வரும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்தத் தகவல், வள்ளவிளை மீனவ கிராமங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல்போன அனைத்து மீனவர்களும் கரை வந்து சேரட்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க