வெளியிடப்பட்ட நேரம்: 08:51 (04/01/2018)

கடைசி தொடர்பு:09:59 (04/01/2018)

போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை: ஊதிய ஒப்பந்தத்தில் சுமுகத் தீர்வு எட்டப்படுமா?

13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, இன்று போக்குவரத்து ஊழியர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இன்றாவது ஊதியப் பிரச்னையில் ஒரு சுமுக முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பில் போக்குவரத்து ஊழியர்கள் இருக்கிறார்கள். 
 

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், சுமார் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்துவருகிறார்கள். இவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, 12-வது ஊதிய ஒப்பந்தம் 31-8-2016-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இதுதொடர்பாக, பலமுறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனாலும், ஒரு சுமுகத் தீர்வு எட்டப்படாமல் இழுபறி நிலையிலேயே இருக்கிறது. 

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், `முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிக்கிறேன்' என்று கூறியிருந்தார். இதையடுத்து, இன்று குரோம்பேட்டையில் இருக்கும் மாநகர போக்குவரத்து பயிற்சி மையத்தில், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.