வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (04/01/2018)

கடைசி தொடர்பு:11:30 (04/01/2018)

ஜெ. பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்; அப்போலோ மருத்துவ கண்காணிப்பாளர் சத்யபாமாவிடம் விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையத்தின் முன், அப்போலோ மருத்துவமனை தரப்பில் முதல் ஆளாக மருத்துவமனை கண்காணிப்பாளர் சத்யபாமா ஆஜரானார். 

ஆறுமுகசாமி

ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சைபெற்றுவந்த அவர்,  டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. ஜெயலலிதா மறைவுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்திவருகிறது, ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன். அதன் தொடர்ச்சியாக,  விசாரணை ஆணையம் அப்போலோ மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து, அப்போலோ மருத்துவமனை தரப்பில், மருத்துவமனை கண்காணிப்பாளர் சத்யபாமா நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு இன்று விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.