`என் மரணத்துக்கு இந்த 6 பேரும்தான் காரணம்' - பெரியார் பல்கலைப் பதிவாளர் அங்கமுத்து பகீர் கடிதம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து, கடந்த மாதம் திடீரென தற்கொலைசெய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம்பற்றி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம், நேற்று அவருடைய குடும்பத்தினருக்குக் கிடைத்ததை அடுத்து, அதை காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இதனால், பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்,  2012 முதல் 2015 வரை பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. அவர் பதிவாளராக இருந்தபோது,  முத்துச்செழியனும் சுவாமிநாதனும் துணைவேந்தர்களாக இருந்தார்கள். அப்போது, தகுதி இல்லாதவர்களை பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கும், பல்கலைக்கழக ஊழியர்கள் பணிக்கும், ஒரே சாதியைச் சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நியமித்தார்கள். அவர்களுடைய கோப்புகள் இருந்தால் பிற்காலத்தில் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், தீ வைத்துக் கொளுத்திவிட்டார்கள்.

அங்கமுத்துவின் பணிக்காலம் நிறைவுபெற்று புதிய பதிவாளராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு,  பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுவாமிநாதனின் பணிக்காலமும் நிறைவுபெற்றது.  தற்போது, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வு நடைபெற்றுவருகிறது. அதில், அங்கமுத்துவும் தேர்வாகியிருந்தார். இந்நிலையில் பதிவாளர் மணிவண்ணன், கோப்புகளைக் காணவில்லை என சூரமங்கலம் காவல் நிலையத்தில் அங்கமுத்து மீது புகார் கொடுத்தார். இந்தக் காரணத்தால்தான் அங்கமுத்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

அங்கமுத்து எழுதியுள்ள கடிதத்தில், ''துணைவேந்தர்கள்தான் பல்கலைக்கழகப் பணிக்கு ஆட்களைத் தேர்வுசெய்ய முடியும். அவர்கள் தேர்வுசெய்து கொடுத்தவர்களின் கோப்புகளைப் பெற்று கையொப்பமிட்டு, சம்பந்தப்பட்ட துறைக்குக் கொடுத்துவிட்டேன். இறுதியில், நான் மட்டுமே தவறு செய்துள்ளதாக காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்கள். என் மரணத்துக்குக் காரணமானவர்கள், துணைவேந்தர் சுவாமிநாதன், பதிவாளர் மணிவண்ணன், கண்காணிப்பாளர்கள் ராஜமாணிக்கம், ஶ்ரீதர், பதிவாளரின் நேர்முக உதவியாளர் நெல்சன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத் துறையைச் சேர்ந்த குழந்தைவேல் எனக்  குறிப்பிட்டுள்ளார்.  இதையடுத்து, காவல்துறை இவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!