கொடுத்தது ரூ.5 லட்சம்; விற்றது ரூ.65 லட்சம்! விவசாயியைப் பதறவைத்த ஃபைனான்ஸியர்

''எங்களுக்குத் தெரியாமலேயே எங்க விவசாய நிலத்தை இன்னொருவர் பெயருக்கு கிரையம் செய்துவிட்டார்கள். அவர், எங்க விவசாய நிலத்தில் அடியாட்களைக்கொண்டு அத்துமீறி விவசாயம்செய்ய முயற்சிக்கிறார். இதற்கு, ஈரோட்டைச் சேர்ந்த ஃபைனான்ஸியர் சுரேஷ் காரணம். ஈரோடு காவல்துறை, சுரேஷை உடனே கைதுசெய்ய வேண்டும்''என்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் ஒருவர் புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி நிலம் பறிகொடுத்தவர், ''என் பேரு ஈஸ்வரமூர்த்தி, எங்க அண்ணன் பேரு சடையப்பசாமி. எங்க அம்மா பேரு சாமியாத்தாள். நாங்க, ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா சிவகிரி அருகே உள்ள மூலப்பாளையத்தில் குடியிருக்கிறோம். எங்களுக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. 2011-ம் ஆண்டு, கடும் வறட்சி காரணமாகவும் வறுமையின் காரணமாகவும், காட்டில் விவசாயம் செய்ய முடியாததால் நிலம் பாழ்பட்டுப் போய்விட்டது. விவசாய நிலத்தில் முள் மரங்கள் வளர்ந்துவிட்டன. அதை அகற்றிவிட்டுப் பன்படுத்த எங்களுக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. இதனால், ஈரோட்டைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் 5 லட்சம் ஃபைனான்ஸ் கேட்டோம். சுரேஷ், அவருடைய தொழில் பார்ட்னர் திருச்செங்கோட்டைச் சேர்ந்த உதயகுமார் பேரில் நிலத்தை கிரையம்செய்துவைத்தால் பணம் தருவதாகக் கூறினார்.

அதையடுத்து, 2015-ம் ஆண்டு திருச்செங்கோட்டைச் சேர்ந்த உதயகுமார் பெயருக்கு 2 ஏக்கர் நிலத்தை கிரையம்செய்துவைத்து, 5 லட்சத்தைப் பெற்று காட்டை சீர்படுத்தினோம். நாங்கள் பணம் வாங்கிய பின், 8 மாதம் கழித்து எங்களுக்குத் தெரியாமல், பெருந்துறையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு 65 லட்சத்துக்கு நிலத்தை விற்றுவிட்டார்கள். சுரேஷிடம் இதுபற்றி கேட்டதற்கு, எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். அதையடுத்து, ஈரோடு எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தோம். நில அபகரிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எங்க நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!