காதலியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய காதலன்! 18 மணி நேரத்தில் நடந்த சோகம்

'ஒருநாள் வாழ்ந்தாலும் உன்னோடுதான் வாழ்வேன்' என்று அடம்பிடிக்கும் சீன்களை தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம். அதேபோன்ற  உண்மைச் சம்பவம், நாகரிக பிம்பமான அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. தற்போது, அந்தப் புகைப்படம் இணையத்தில் பரவிவருகிறது.

புற்றுநோய் பாதித்த காதலியை திருமணம் செய்த காதலர்!

அமெரிக்காவின் ஹார்ட்ஃபோர்ட் நகரைச் சேர்ந்த ஹீதர் மோஷர், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.  டேவிட்டும் ஹீதரும் 2015-ம் ஆண்டு,  ஒரு நடனப்பள்ளியில் சந்தித்துக்கொண்டனர். நட்பு, காதலாகக் கனிந்தது. 2016-ம் ஆண்டு, ஹீதரை மார்பகப் புற்றுநோய் பாதித்திருந்தது தெரியவந்தது. டேவிட் தன் காதலில் உறுதியாக இருந்தார். காதலியை விட்டு விலகிவிடாமல், அருகில் இருந்து குழந்தையைப்போல பார்த்துக்கொண்டார். நோய் தீவிரம் அடைந்த நிலையில், ஹீதர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டேவிட்டை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதுதான் ஹீதரின் ஆசை. காதலியின் இறுதி ஆசையை நிறைவேற்ற டேவிட் முடிவுசெய்தார். டிசம்பர் 30-ம் தேதி, காதலியைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார். மருத்துவர்களோ, அதுவரை ஹீதர் உயிர்பிழைத்திருப்பது சந்தேகம்தான் என்றனர்.

தொடர்ந்து, டிசம்பர் 23-ம் தேதி, இருவருக்கும் திருமணம் நடந்தது. மருத்துவமனையில் உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ, ஹீதர் மணப் பெண் அலங்காரத்துடன் காணப்பட்டார்.  அப்போதும் முகத்தில் வென்டிலேட்டர் மாட்டப்பட்டிருந்தது.

டேவிட் கரங்களில் ஹீதர் மோதிரம் மாட்டிய அடுத்த விநாடி, காதலில் தான் வெற்றிபெற்றதைk காட்டும் வகையில், இரு கைகளையும் உயரே எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார் ஹீதர். திருமணம் முடிந்த 18 மணி நேரத்தில் புற்றுநோய் வெற்றிபெற்றதுதான் அடுத்த சோகம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!