வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (04/01/2018)

கடைசி தொடர்பு:15:20 (04/01/2018)

தெறித்து ஓடிய முன்னாள் எம்.எல்.ஏ! சிக்கிக்கொண்ட மணல் கடத்தல் கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம், பழையாற்றில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தலைமையில் ஒரு கும்பல் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தது. அதைத் தெரிந்துகொண்ட அந்தப் பகுதி பொதுமக்கள், அந்தக் கும்பலைச் சுற்றி வளைத்தனர். நாஞ்சில் முருகேசன் தனது காரை விட்டுவிட்டு வேறு ஒரு பைக்கில் தப்பிச் சென்றார். மணல் கடத்தல் கும்பலில் இரண்டு பேரைத் தவிர மற்ற அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட இரண்டு பேரையும் பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர்.

நாஞ்சில் முருகேசனின் காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க ஒன்றிய செயற்குழு உறுப்பினரான ஐயப்பன் என்பவர் ஆரல்வாய்மொழி போலீஸ் ஸ்டேஷனில்  புகார் ஒன்றை கொடுத்தார். அந்தப் புகாரில், கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் அருகில் உள்ள சடையான்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் ஒரு கும்பலுடன் மணல் கடத்திலில் ஈடுபட்டார்.

அதைத் தட்டிக்கேட்ட பொதுமக்களையும் மிரட்டி உள்ளார். எனவே, அவர்மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்தப் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட ஆரல்வாய்மொழி போலீஸார் அவருக்கு ரசீது கொடுத்துள்ளனர். மணல் கடத்தல் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையும் நடந்துவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க