வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (04/01/2018)

கடைசி தொடர்பு:14:01 (04/01/2018)

தங்க இடமில்லாமல் இரவில் குளிரில் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள்! மேகமலையில் தொடரும் பரிதாபம்

தேனி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது மேகமலை. வன உயிரினக் காப்பகமாக திகழும் மேகமலையில் யானைகள், சிறுத்தை, கரடி, சிங்கவால்குரங்கு, ஹார்ன்பில் உட்பட ஏராளமான வன உயிரினங்கள் உள்ளன. மேலும், தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஐந்து அணைகள் உள்ளன. திரும்பும் திசையெங்கம் வரவேற்கும் தேயிலை தோட்டங்கள், நம்மை சூழ்ந்துகொள்ளும் மேகங்கள் என மேகமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சின்னமனூர் முதல் மேகமலைக்குச் செல்லும் சாலையைச் சீரமைக்கும் பணி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று தற்போது பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சாலை சீரானதால் மேகமலைக்குச் செல்லும் சுற்றுலா வாகனங்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், மேகமலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி சார்பாக உள்ள சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதியில் இருக்கும் தண்ணீர் மோட்டார் பழுதானதால் கடந்த ஒருவாரத்துக்கு மேலாக  சுற்றுலாப் பயணிகளை அங்கே தங்க அனுமதிப்பதில்லை. நாள் ஒன்றுக்கு ஒரு அறைக்கு 750 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் பேரூராட்சி, பழுதான மின்மோட்டாரை சரிசெய்ய ஒருவாரத்துக்கும் மேலாக தாமதம் செய்துவருவதால், சுற்றுலாப் பயணிகள் மாலையே வீட்டுக்குத் திரும்பும் சூழல் ஏற்படுகிறது.

மேகமலை வன உயிரினக் காப்பகம் என்பதால், மாலை ஆறு மணிக்கு மேல் மலையில் இருந்து கீழிறங்க வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் தங்க இடம் இல்லாமல் தாங்கள் வந்த வாகனங்களிலேயே கடும் குளிரில் இரவைக்கழிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் பேரூராட்சி அதிகாரிகளிடம் உடனே பேசி பழுதான மின்மோட்டாரை உடனே சரிசெய்ய உத்தரவிட வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.