தொடங்கியது யானைகள் நலவாழ்வு முகாம்! ஸ்ரீரங்கம் ஆண்டாளுக்கு முதல் மரியாதை

யானைகள் நல வாழ்வு முகாம் 2018

கோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கான நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையத்தில் இன்று  தொடங்கியது. ஸ்ரீரங்கம் யானை ஆண்டாளுக்கு முதலில் உணவு வழங்கி, முகாமை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரனும் திண்டுக்கல் சீனிவாசனும் தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாகக் கோயில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும்  சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் இன்று காலை தொடங்கியது. முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். 

அதிகாலையிலேயே அனைத்து யானைகளையும் குளிப்பாட்டி அழகாக அலங்கரித்து வரிசையாக நிறுத்தி வைத்தனர். பூஜைக்குப் பிறகு, யானைகளுக்குப் பழங்களை வழங்கி முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள். வழக்கம்போல ஸ்ரீரங்கம் கோயில் யானையான ஆண்டாளுக்கு முதல் மரியாதைக் கொடுக்கப்பட்டது. ஆண்டாளுக்கு அடுத்து  மற்ற அனைத்து யானைகளுக்கும் உணவு வழங்கப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 33 யானைகள் இந்த முகாமில் கலந்துகொண்டுள்ளன. இதற்காக 1,50,79,000 ரூபாய் அரசு சார்பாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி வரை நடக்க உள்ள இந்த முகாமில் 33 யானைகளுக்கும் பல்வேறு சிகிச்சைகளும் உணவுகளும்  வழங்கப்பட இருக்கிறது. முகாம் அருகே உள்ள பவானியாற்றில் தினந்தோறும் இருவேளை குளியல், தினமும் 5 கி.மீட்டர் நடைப்பயிற்சி,  பசுந்தீவன உணவு, ஆரோக்கியத்தைக் காக்க மருந்துகள் போன்றவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முகாம் அமைந்துள்ள பகுதி வனப்பகுதி என்பதாலும் காட்டு யானைகள் முகாமுக்குள் புகுந்துவிட வாய்ப்பு உள்ளது என்று முகாமைச் சுற்றியுள்ள மக்கள் புகார் சொல்கிறார்கள். ஆனால், "ஐந்து கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். காட்டு யானைகள் நெருங்கினால் உடனே விரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது முகாமைச் சுற்றியும் தொங்கும் மின்சாரவேலி அமைத்துள்ளோம். நிச்சயமாகக் காட்டு யானைகள் முகாமுக்குள் நுழைய வாய்ப்பில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் வனத்துறையினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!