ரூ.20 டோக்கனுக்குப் பதிலாக, `திருநெல்வேலி அல்வா' ; ஆர்.கே.நகர்வாசிகளுக்குக் கிடைத்த அதிர்ச்சி!

ஆர்.கே. நகரில், 20 ரூபாய் டோக்கனுடன் வந்தவர்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்ததால் ஏமாற்றமடைந்துள்ளனர். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது, 20ரூபாய் நோட்டை டோக்கனாக வழங்கி, தேர்தல் முடிந்த பின்னர்,  ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தருவதாக டி.டி.வி. தினகரன் தரப்பு வாக்கு சேகரித்ததாகச் சொல்லப்பட்டது. தேர்தல் கமிஷனின் கெடுபிடி அதிகமாக இருப்பதால், தேர்தல் முடிந்தபின் அனைவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று டி.டி.வி ஆதரவாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  இதனிடையே டி.டி.வி. தினகரன் அமோக வெற்றியும் பெற்றார்.

இதையடுத்து, 20 ரூபாய் டோக்கன் பெற்றவர்கள் 10 ஆயிரம் ரூபாய் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் ஆர்.கே. நகர் பகுதியில் அதிகாலை 3 மணியளவில்கூட, இரண்டுபேர் டோக்கனைப் பெற்றுக்கொண்டு பணம் கொடுப்பதாக வதந்தி கிளம்ப, இரவு நேரத்தில்கூட தூக்கத்தைத் தொலைத்து ஆண்களும் பெண்களும்  தெருத்தெருவாக அலைவதாகச் சொல்லப்படுகிறது

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மீனாம்பாள், நேதாஜி நகர், எழில் நகர் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் சிலரை செல்போன் மூலம் சிலர்  தொடர்புகொண்டு, 20 ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு, உரிய பணத்தை வாங்கிச்செல்லுங்கள் என்று கூறினர்.  'சே... இப்படி ஒரு அரசியல்வாதியா... சொன்னபடி பணத்தை பட்டுவாடா செய்கிறாரே... இவரையா போய் நாம் சந்தேகப்பட்டோம்' என்று புழகாங்கிதம் அடைந்த மக்கள்,  விழுந்தடித்து ஓடினர். அங்கே, காரில் இருந்த மூன்று பேர் டோக்கனைப் பெற்று கொண்டு, வந்தவர்களுக்கு தலா ஒரு பொட்டலத்தைக் கொடுத்துள்ளனர். 

'இங்கே வைத்துப் பிரிக்காதீர்கள். போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. வீட்டுக்குப் போய் நிதானமா திறந்து பாருங்க' என்றும்  கூறியிருக்கின்றனர்.  பரபரப்புடன் வீட்டுக்கு ஓடிச் சென்று பொட்டலத்தை  அவசரம் அவசரமாக பிரித்துப் பார்த்துள்ளனர். பொட்டலத்தில் மஸ்கோத் அல்வா மட்டுமே இருந்துள்ளது. ஒருவேளை அல்வாவுக்குள் நோட்டு இருக்கிறதோ என்று கிண்டிக் கிளறிப் பார்த்தும் பலனில்லை. 'நம்பி ஓட்டு போட்ட நமக்கே அல்வா கொடுத்துட்டாங்களே' என்று தற்போது புலம்பியபடி இருக்கின்றனர்.

வாக்காளர்களுக்கு அல்வா கொடுத்தது நெல்லையைச் சேர்ந்த வேலாயுதன், நீல முரளி என்று தெரியவந்துள்ளது. அவர்கள் வந்த காரும் பறிமுதல்செய்யப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!