வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (04/01/2018)

கடைசி தொடர்பு:19:38 (04/01/2018)

`சென்னை சாலையில் தீப்பொறி பறக்க பைக்கை ஓட்டிய இளைஞர்கள்' - சிக்கவைத்த வைரல் வீடியோ! 

பேரிகார்டை சாலையில் தீப்பொறி பறக்க இழுத்துச் செல்லும் இளைஞர்கள்

சென்னை சாலையில்,  தீப்பொறி பறக்க பேரிகாடை  இழுத்து, இளைஞர்கள் சிலர் பைக்கை வேமாக ஓட்டி சாகசம் செய்துள்ளனர். இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகிவருவதால், சம்பந்தப்பட்ட இளைஞர்களைப் பிடிக்க கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

`இளங்கன்று பயமறியாது' என்பதற்கு ஏற்ப, சென்னை சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வைக்கப்பட்டிருந்த பேரிகாடை  பைக்கில் செல்லும் இளைஞர்கள் இழுத்துச்செல்லும் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், நள்ளிரவு நேரத்தில் பேரிகாடை வேகமாக இழுத்துச்செல்வதால் தீப்பொறி பறக்கிறது. அந்த மகிழ்ச்சியில், இளைஞர்கள் சாலையில்  பயணிக்கின்றனர். ஆனால், அந்த வீடியோவைப் பார்ப்பவர்களின் மனம் பதறுகிறது. அந்த வீடியோகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்துவருகின்றனர். 29 நொடிகள், 18 நொடிகள் ஓடக்கூடிய வீடியோக்களை துல்லியமாக ஆராய்ந்த போக்குவரத்து போலீஸார், அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். புத்தாண்டில் மது அருந்தி வாகனங்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால், இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிடக் குறைந்தது. இதனால் நிம்மதிப் பெருமூச்சு விட்ட போக்குவரத்து போலீஸாருக்கு, பேரிகாடை  துணிச்சலாக இழுத்துச்செல்லும் இளைஞர்களால் தலைவலி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னையில் கார், பைக் ரேஸில் ஈடுபடுவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், பேரிகாடை இழுத்துச்செல்லும் இளைஞர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து கூடுதல் கமிஷனர் அருணிடம் கேட்டபோது, ``பேரிகாடை  இழுத்துச்செல்லும் இளைஞர்களை அடையாளம் காண உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் இழுத்துச்செல்லும் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் ஆராயப்பட்டுவருகின்றன. அவர்கள் குறித்த விவரங்கள் தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

 

 போக்குவரத்து வட்டாரங்கள் கூறுகையில், "வீடியோவில், பைக்கின் பின்னால் அமர்ந்திருப்பவர் பிடித்திருக்கிறார். பேரிகாடிலிருந்து தீப்பொறி அதிகளவில் பறக்கவே பேரிகாட் இழுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, பைக்கின் சைடு ஸ்டாண்டை சாலையில் இழுத்தபடி தீப்பொறி பறக்க சாகசமாகச் செல்வதுண்டு. புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின்போது இதுபோன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவதுண்டு. தற்போதுதான் பேரிகாடை இழுத்துச்சென்றுள்ளனர். அதைப் பின்னால் சென்றபடி செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். சி.சி.டி.வி கேமரா, வீடியோ பதிவுசெய்த செல்போன்குறித்து விசாரித்துவருகிறோம். விரைவில் பேரிகாடை சாலையில் இழுத்துச்சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வீடியோவில் உள்ள பைக்கின் நம்பர்கள் சரியாகத் தெரியவில்லை. இரண்டு இடங்களில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் இழுத்துச் செல்லும் பேரிகாட், எந்த போலீஸ் எல்லைக்குரியது என்றும் விசாரித்துவருகிறோம்" என்றனர்.