வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (04/01/2018)

கடைசி தொடர்பு:13:46 (04/01/2018)

`எனது வெற்றி விலைகொடுத்து வாங்கப்பட்டதா?' - கமல்ஹாசனைச் சாடும் தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தினகரன் மீது நடிகர் கமல்ஹாசன் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அதற்கு, தினகரன் எதிர்வினையாற்றியுள்ளார்.

தினகரன் மற்றும் கமல்ஹாசன்

ஆனந்த விகடன் இதழில், 'என்னுள் மையம் கொண்ட புயல்' தொடர் எழுதிவரும் நடிகர் கமல்ஹாசன், இந்த வாரம் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்தும், அதன் வெற்றிகுறித்தும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஆளும் தரப்பும் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் தரப்பும், அதிக அளவில் பணம் கொடுத்திருப்பதை விமர்சித்துள்ள நடிகர் கமல்ஹாசன், பணம் கொடுத்து வென்ற தினகரனைக் கொண்டாடித் தீர்க்கும் மனநிலையையும் சாடியிருக்கிறார்.

இதையடுத்து, இன்று ஆர்.கே.நகரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தினகரன், `ஆர்.கே.நகர் வெற்றி விலைகொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என்று கமல்ஹாசன் கருத்து கூறியிருப்பதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். எப்படி இந்த வெற்றி விலைகொடுத்து வாங்கப்பட்டது என்று கமல் சொல்கிறார்? தேர்தலில் வாக்களித்தது மக்கள். அவர்களால்தான் நான் வெற்றி பெற்றேன். என்மீதும் என் ஆதரவாளர்கள்மீதும் கடுமையான வழக்குகள் போட்டுவருகிறது தமிழக அரசு. ஜெயலலிதாவின் இயக்கத்தில் இருக்கும் எங்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது' என்று கருத்து கூறினார்.