சிக்னலில் நிற்காமல் சென்ற கார்கள்... தே.மு.தி.க-வினரை விரட்டிப்பிடித்த மக்கள்! இசிஆர் சாலையில் நடந்த ரியல் ரிலே

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையை வழங்கக்கோரி, தே.மு.தி.க சார்பில்  கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலை முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தே.மு.தி.க-வினர்  வந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்து கடலூர் நோக்கி 4 கார்களில் தே.மு.தி.க-வினர் வந்துகொண்டிருந்தனர். புதுச்சேரி இந்திரா காந்தி சிக்னல் அருகே அந்த 4 கார்களும் சிக்னலில் நிற்காமல் வேகமாகச் சென்றன. அப்போது, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸார், அந்த வாகனங்களை நிறுத்த முயன்றார். ஆனால், அதில் 3 கார்கள் நிற்காமல் சென்றுவிட்டன. பின்னர், பொதுமக்கள் அதில் ஒரு வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். மேலும், வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் சென்றது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பிடிக்கப்பட்ட அந்த வாகனத்தில் வந்த தே.மு.தி.க-வினரை பொதுமக்கள் தாக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். சிக்னலில் நிற்காமல் சென்றது தொடர்பாக, போலீஸார் தே.மு.தி.க-வினரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!