வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (04/01/2018)

கடைசி தொடர்பு:15:14 (04/01/2018)

மூலிகை மரங்கள் நிறைந்த அகஸ்தியர் மலையில் ‘ட்ரெக்கிங்’ சீஸன் தொடக்கம்! #NeverMiss

கஸ்தியர் மலையில்தான் தாமிரபரணி, நெய்யாறு, கரமணை போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. சுமார் 2,500 அரியவகை மூலிகைச் செடிகள், மரங்கள் நிறைந்த யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பூகோளப் பகுதி இது. அகஸ்தியர் இந்த மலையில் தவம் இருந்ததாக புராணம் சொல்கிறது. தென்னிந்தியாவின் அபாயகரமான மிகக் கடுமையான ட்ரெக்கிங் பாதைகளில் இதுவும் ஒன்று. சுமார் 6,300 அடி உயரம் ஏறி இறங்கினால், 56 கிலோமீட்டர் தொலைவு. பாதைகள் அபாயகரமானவை, செங்குத்தானவை!

அகஸ்தியர் மலை

Photo Courtesy: Tenkasi Nature Club

நீங்கள் நினைத்தவுடனே அகஸ்தியர் சிகரத்துக்குச் சென்றுவிட முடியாது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை அகஸ்தியர் மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கிறது கேரள வனத்துறை. அகஸ்தியர் மலையில் ட்ரெக்கிங் செல்வதற்கு, இந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி முன்பதிவு ஆரம்பிக்கிறது. ஜனவரி 14-ம் தேதி முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளது. தினமும் காலை 11 மணிக்கு ஆன்லைனில் பதிவுசெய்துகொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி. தலைக்கு 500 ரூபாய் கட்டணம். சீஸன் இல்லாத நாள்களில் ஐந்து பேர்கொண்ட குழுவுக்கு 7,500 ரூபாய் கட்டணம். மலை ஏற ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஓர் அடையாள அட்டை அவசியம். 

அகஸ்தியர் மலை

Photo Courtesy: Tenkasi Nature Club

திருவனந்தபுரத்திலிருந்து போனக்காடு செக்போஸ்ட், 60 கி.மீ தொலைவில் உள்ளது. உணவை பார்சல் வாங்கிக்கொள்ளுங்கள். செல்லும் பாதை எங்கும் அருவிகள் உள்ளதால், ஆனந்தக் குளியல் போட்டுக்கொள்ளலாம். மதுபாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தால் பறிமுதல் செய்துவிடுவார்கள். கடுமையான மலைப்பாதை என்பதால், 14 வயது குறைந்தவர்களுக்கு அனுமதியில்லை.

அகஸ்தியர் மலை செல்வது எப்படி?

பெண்களுக்கு அனுமதியில்லை. உங்களை அறியாமலேயே பயமும் தொற்றிக்கொள்ளும். பாம்புகள், பூச்சிகள் ஏராளம். அட்டைப்பூச்சி அபாயமும் உள்ளது. அகஸ்தியர் சிகரம்தான் ஆனைமுடிக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம். இந்த மலையின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகித்தான், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளங்கொழிக்கச் செய்கிறது பொருநை நதி.

அகஸ்தியர் மலை அருவிகள்

Photo Courtesy: Tenkasi Nature Club

நீண்ட தொலைவு ட்ரெக்கிங் பயணம் என்பதால், குழுவைவிட்டு பிரிந்துவிடக் கூடாது. சத்தம் எழுப்பாமல் வரிசையாகக் நடந்து செல்ல வேண்டும். முதல் நாள் 12 கிலோமீட்டர் தொலைவு நடந்து அதிரி மலையில் உள்ள  கேம்ப்பில் தங்கலாம். திகில் படங்களில் வரும் பங்களா போன்று பழைமையான கட்டடம் ஒன்று அங்கே உள்ளது. இடிந்து சிதிலமடைந்து கிடக்கும் அந்தக் கட்டடத்தில் தங்க முடியாது. அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் தங்கிக்கொள்ளலாம். உங்களுடன் வனத்துறை ஊழியர் ஒருவரும் வழிகாட்டியும் வருவார்கள். உங்களுக்குத் தேவையான உணவுகளை அவர்களே சமைத்துத் தருவார்கள். வயிற்றுக்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் கஞ்சி, பயறு என கேரள உணவு  கிடைக்கும்.  நடந்த அலுப்புக்கு உணவு அமிர்தமாக இருக்கும். 

அகஸ்தியர் மலை ட்ரெக்கிங்

Photo Courtesy: Tenkasi Nature Club

வனத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் சீதோஷ்ண நிலை மாறலாம். அதனால், நீங்கள் நினைத்த மாதிரி ட்ரெக்கிங்கை குறிப்பிட்ட நாளுக்குள் முடித்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்படலாம். மழை பெய்தால் ட்ரெக்கிங்கை தள்ளிவைத்துவிடுவார்கள். மூன்று நாள்கள் திட்டமிட்டுச் சென்றால், ஒரு வாரம் கழித்தே அகஸ்தியர் மலையை அடைந்தவர்களும் உண்டு. அகஸ்தியர் மலையை நோக்கிச் செல்கையில் செங்குத்தான பாதைகளில் கயிற்றைப் பிடித்து ஏறி செல்ல வேண்டும். சிலர், `திரும்பிப் போய்விடலாம்' என்றுகூட சொல்லாம். உறுதியுள்ளவர்கள் மட்டுமே அகஸ்தியர் மலையின் உச்சியை அடைய முடியும். எங்கும் பனிமூட்டமாகவே இருக்கும். வனத்துறையினர் ஆங்காங்கே மஞ்சள் வண்ணத்தில் பாறைகளில் அம்புகுறி வரைந்துள்ளனர். அவைதான் உங்களுக்கு வழிகாட்டி.

அகஸ்தியர் மலை ட்ரெக்கிங்

Photo Courtesy: Tenkasi Nature Club

அனுபவம் வாய்ந்தவர்தான் குழுவின் தலைவராக இருப்பார். ஓநாய் கூட்டம் எப்படி இயங்குகிறதோ, அப்படிதான் ட்ரெக்கிங் குழுவும் இயங்க வேண்டும். குழுவின் முன்னால் யார் நடக்க வேண்டும், பின்னால் யார் வர வேண்டும் போன்ற பாதுகாப்புத் தகவல்களை குழுத் தலைவர் வழங்குவார். வேகமாக நடப்பவர்கள், மெதுவாக நடப்பவர்கள் என அனைவரையும் கணித்து அதற்கேற்றார்போல் குழு இயங்க வேண்டும். உயரே செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரிக்கும்போது, சர்வஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  கயிறுகளைப் பயன்படுத்திதான் பாறைகளில் செங்குத்தாக ஏறவேண்டியது இருக்கும். அகஸ்தியர் மலை ட்ரெக்கிங்கின் மிகவும் த்ரில்லிங்கான பகுதி இது.

அகஸ்தியர் மலை ட்ரெக்கிங்

Photo Courtesy: Tenkasi Nature Club

வழுக்குப்பாறையிலிருந்து அரை மணி நேரம் நடந்தால், உங்களை குறுமுனி வரவேற்பார். உடன் சிவபெருமானும். `தென்னிந்தியாவின் உயரமான சிகரங்களில் ஒன்றின் மீது நின்றுகொண்டிருக்கிறோம்' என்ற பெருமை உங்களுக்குள் எழும்.

அகஸ்தியர் மலை ட்ரெக்கிங்

Photo Courtesy: Tenkasi Nature Club

Nilgiri Biosphere, சுந்தரவனக் காடுகள்போல யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். சென்னையிலிருந்து செல்பவர்கள் திருவனந்தபுரத்துக்கு ரயிலில் சென்று அங்கிருந்து போனகாடு செக்போஸ்டுக்கு வாகனம் எடுத்துக்கொள்ளலாம். வாகனத்தில் செல்பவர்கள் தென்காசி வழியாக நெடுமங்காடு  சென்று அங்கிருந்து போனகாடு செல்ல முடியும். 10 பேர் அடங்கிய குழுவாக மலையேற்றம் செய்வது உகந்தது. மருந்துகள், மாத்திரைகள் கொண்டுசெல்ல மறந்துவிட வேண்டாம். 

மிகவும் ரிஸ்க் நிறைந்த வனத்துக்குள் செல்கிறீர்கள்...  பாதுகாப்பு முக்கியம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்