வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (04/01/2018)

கடைசி தொடர்பு:09:05 (05/01/2018)

‘தினம் 100 செல்போன்கள்!’ - திருடர்களின் தினசரி இலக்கு

செல்போன்

சென்னையில் செல்போன் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பரபரப்பான சாலையில் செல்போனில் பேசியபடி நடந்துசெல்பவர்களை குறி வைத்து செல்போனை பிடுங்கிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. தினமும் 100க்கும் மேற்பட்ட செல்போன்  திருட்டு வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன.

செல்போன் 

செல்போன் இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு செல்போனை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. இதனால், செல்போன் திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்துவிட்டன. முன்பெல்லாம் சென்னையில் செயின் பறிப்புச் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் அதிகளவில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும். ஆனால், சமீபகாலமாக செல்போன் பறிப்புச் சம்பவங்கள் தொடர்பாக புகார்கள் அதிகமாக வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதிலும் மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதிகளில்தாம்  கொள்ளையர்கள் செல்போன் பறிப்புச் சம்பவங்களில் துணிகரமாக ஈடுபடுகின்றனர். 
 
எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை அண்ணாசாலையில் நடந்த செல்போன் பறிப்புச் சம்பவம் இது. பைக்கில் வந்த இருவர்  செல்போனைப் பறித்துவிட்டதாக, பதறியப்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் ஐ.டி.கம்பெனியில் வேலைப்பார்க்கும் இன்ஜினீயர் ஒருவர். அவர் கொடுத்த புகாரில், 'சார்.. பைக்கை ஓரமாக நிறுத்திக்கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். பின்னால் டூவிலரில் வந்த இருவர், அப்படியே செல்போனை பிடுங்கிக் கொண்டு பறந்துவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார். அவருக்கு மனு ஏற்பு சான்றிதழை கொடுத்த போலீஸார், நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியனுப்பினர். செல்போனை பறிக்கொடுத்த இன்ஜினீயர், போனுக்காக கடன்வாங்கிய மாதத்தவணையை வேறுவழியின்றி செலுத்திமுடித்தபிறகும் அவருக்கு செல்போன் கிடைக்கவில்லை.  

இன்னொரு சம்பவம். சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த பிரதீப்நாயர் கடந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதிசெல்போன் பறிக்கொடுத்தவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அவரது புகாரைப் பெற்ற எழும்பூர் போலீஸார், செல்போன் மாயம் என்று மனு ஏற்பு சான்றிதழைக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து பிரதீப்நாயர் கூறுகையில், ‘கேரளாவிலிருந்து சென்னைக்கு பிசினஸ் விசயமாக வந்திருந்தேன். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உள்ள ஓட்டலின் முன்பு நின்றுகொண்டிருந்தேன். அப்போது பைக்கில் வந்தவர்கள் என்னுடைய 40 ஆயிரம் மதிப்புள்ள செல்போனைப் பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தும் இதுவரை செல்போன் கண்டுபிடிக்கப்படவில்லை" என்றார் வேதனையுடன்.

இப்படியும் செல்போன் பறிப்பார்கள்

சில மாதங்களுக்கு முன்பு சென்னை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை வழியாக பைக்கில் தனியார் நிறுவன ஊழியர் சென்று கொண்டிருந்தார். சிக்னலுக்காக அவர் காத்திருந்தபோது, பின்னால் பைக்கில் வந்த இருவர், ஒரு துண்டுச் சீட்டை காண்பித்து அதில் உள்ள முகவரியைக் கேட்டுள்ளனர். சிக்னல் ரிலீஸான சமயத்தில் பைக்கில் வந்தவர்கள், தனியார் நிறுவன ஊழியரின் சட்டைப் பையிலிருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு பறந்துவிட்டனர். அவரும், செல்போன் கொள்ளையர்களை விரட்டிச் சென்றுள்ளார். ஆனால் கொள்ளையர்கள் சிக்கவில்லை. அதன்பிறகு நுங்கம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தும் செல்போன் குறித்து துப்புதுலங்கவில்லை. 

 கூட்ட நெரிசலாக இருக்கும் பஸ்ஸை குறி வைத்து ஏறும் செல்போன் திருடர்கள், கும்பலாகச் சேர்ந்து புதிய செல்போன்களை குறி வைத்து திருடுகின்றனர். இதற்காக ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள், பயணிகளைப் போல ஏறி, வாசல் அருகேயே நிற்பார்கள். பிறகு, ஒருவர் செல்போனை எடுக்க.. அடுத்தக் கொள்ளையன் செல்போனோடு ஓடும் பஸ்சிலிருந்து குதித்துவிடுவது இவர்களது கொள்ளை ஸ்டைல். இதனால், பஸ், ரயில் எனக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பலரது செல்போன்கள் பறிபோய் உள்ளன. 

செல்போன்

ஐ..எம்.இ.ஐ. எண்கள் மாற்றம்

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "முன்பெல்லாம், செயின் பறிப்பு சம்பவங்கள்தாம் அதிகளவில் நடந்தன. தற்போது, செல்போன் பறிப்புச் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டன. பைக்கில் வரும் நபர்கள் நைசாகப் பேசி கவனத்தை திசைதிருப்பி செல்போனை திருடுகின்றனர். இந்தச் சம்பவத்தில் அதிகளவில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் துப்பு துலக்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. படித்த இளைஞர்கள் செல்போன் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவது வேதனைக்குரியது.

திருட்டுச் செயின்களை விற்பதில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், செல்போன்களை விற்பது எளிதாக உள்ளது. செல்போன்களை ஐ.எம்.இ.ஐ. நம்பர் மூலம் தொலைந்து போன செல்போன்களைக் கண்டறியலாம். இந்தத் தகவல் தொழில்நுட்பத்துக்கும் வேட்டுவைத்துவிட்டனர் புத்திசாலி கொள்ளைக்கும்பல். அதாவது, திருட்டு செல்போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ. நம்பர்களைக்கூட மாற்றிவிடுகின்றனர். இதுவே செல்போனைக் கண்டறியமுடிவதில்லை. புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் காணாமல் போகும் செல்போனைக் கண்டறிய வசதிகள் இருந்தாலும் அதையும் அதே தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி தடுக்கப்படுகிறது. எனவே, ஐ.எம்.இ.ஐ. நம்பர்களை மாற்றப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 20 ஆயிரம் செல்போன் 2 ஆயிரம் ரூபாய்

சென்னையில் எலக்ட்ரானிக் பொருள்கள் அதிகம் விற்கும் அந்தத் தெருவில் செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றிதரும் கும்பல் உள்ளது. அவர்கள் திருட்டுப்போன்களின் லாக்கை எடுத்து அதை மறுபடியும் விற்க தயார்படுத்திக் கொடுக்கின்றனர். இங்கு, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போன்கள்கூட 2 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிறது. தமிழகத்தில் திருடப்படும் செல்போன்கள் வடமாநிலங்களுக்கும், ஏன் வெளிநாடுகளுக்கும்கூட விற்கப்படுகிறது. அவ்வாறு விற்கப்பட்ட செல்போன்களை ஐ.எம்.இ.ஐ எண்கள் மூலம் கண்டறியமுடியாத நிலை உள்ளது. இன்னும் சிலர், தமிழகத்தில் திருடப்படும் செல்போன்களை சமூகவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் செல்போனை பறிக்கொடுத்தவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். இதைதவிர்க்கத்தான் செல்போன் தொலைந்தவுடன் போலீஸ் நிலையத்தில் பெரும்பாலானவர்கள் புகார் கொடுக்கின்றனர்.

செல்போன் மாயம் என்று பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்

செல்போன் திருட்டைத் தவிர்க்க அதைப்பயன்படுத்துபவர்கள்தாம் விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். செல்போன் திருடப்பட்டால் அதோடு உங்களது ரகசியங்களும் திருடப்படுகின்றன. அதாவது, வங்கியின் அக்கவுன்ட் நம்பர், ஏ.டி.எம் உள்ளிட்ட கார்டுகளின் பாஸ்வேர்டுகளை பலர் செல்போன்களில் பதிந்துவைத்திருப்பதுண்டு. அத்தகைய செல்போன்கள் திருடப்படும்போது, அதிலுள்ள தகவல்கள் மூலம் அடுத்தடுத்த குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், ரகசிய தகவல்கள் பதிவு செய்த செல்போன்கள் தொலைந்தால் அடுத்த நிமிடமே அவற்றை மாற்ற வேண்டும்.

மாணவர்கள் 

செல்போன் திருட்டுகளில் வடமாநில இளைஞர்களோடு, கல்லூரி, பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் அதிகளவில் ஈடுபடுகின்றனர். அதாவது, சிறுவயதிலேயே ஆடம்பரமாக வாழ அவர்கள், தேர்ந்தெடுக்கும் திருட்டுத் தொழிலில் செல்போன் முதன்மையாக இருக்கிறது. மேலும், திருட்டு செல்போன்களை வாங்குவதற்கென தனி நெட்வோர்க் உள்ளது. எளிதாக செல்போன்களை விற்றுவிடலாம் என்பதால் தினமும் செல்போன் திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. சென்னை மாநகரத்தில் மட்டும் தினமும் 100க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்படுவதாக புகார்கள் வருகின்றன. திருட்டு என்று வழக்கை பதிவு செய்தால் சிக்கல் என்றுகருதும் சில காவல்நிலையங்களில் செல்போன் மாயம் என்றே புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன"என்றனர். 


டிரெண்டிங் @ விகடன்