1,800 ரேஷன் கார்டுகளுக்கு 900 வேட்டி - சேலைகள்! இலவசத்திலும் ஊழலா?

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படுவது வழக்கம். வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.28 லட்சம் பேருக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்பட உள்ளது. அதற்காக லாரிகளில் வேட்டி- சேலைகள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகக் கிராம நிர்வாக அலுவலகங்கள் மூலம்தான் இலவச வேட்டி- சேலைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த முறையும் தோவாளை தாலுகாவில் 24 கிராம அலுவலகங்களிலும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 43 கிராம நிர்வாக அலுவலகங்களிலும், கல்குளம் தாலுகாவில் 66 கிராம நிர்வாக அலுவலகங்களிலும், விளவங்கோட்டில் 55 கிராம அலுவலகங்களிலும் என மொத்தம் 188 வருவாய் கிராம அலுவலகங்களில் உள்ள தகுதியான ரேஷன் கார்டு கொண்டவர்களுக்கு இலவச வேட்டி - சேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அந்தந்த ரேஷன் கடைகள் மூலமாக வேட்டி- சேலைகள் விநியோகம் செய்யப்பட இருக்கின்றன. அதற்காகக் கிராம நிர்வாக அலுவலகங்களிலிருந்து வேட்டி -சேலைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ரேஷன் கடைகளில் உள்ள எண்ணிக்கைக்குத் தகுந்தபடி வேட்டி சேலைகள் அனுப்பப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 1,800 ரேஷன் கார்டுகள் கொண்ட கடைக்கு 900 வேட்டி -சேலைகள்தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கு பாதி மட்டுமே அனுப்பப்படுவதால் ரேஷன் கடைக்காரர்கள் மீது மக்கள் ஆவேசப்படும் சூழல் உருவாகும். அனைவருக்கும் இலவச வேட்டி, சேலைகளை கொடுக்காவிட்டால் கண்டிப்பாகப் பிரச்னை உருவாகும். இலவச வேட்டி- சேலைகள் கொடுப்பதிலும் ஊழல் நடக்கிறதா. இல்லை வேட்டி -சேலைகள் குறைவாகத்தான் வந்துள்ளதா என்பதை அரசு அதிகாரிகள் தெளிவு படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!