வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (04/01/2018)

கடைசி தொடர்பு:17:30 (04/01/2018)

“அ.தி.மு.க-வில் எனக்குப் பாதுகாப்பு இல்லை” - அலறுகிறார் ஆவடிகுமார்

ஆவடி குமார்

ரசியல் மேடைகளில் ஆரம்பித்து பத்திரிகை, தொலைக்காட்சி எனும் ஊடகம் வழியே தங்களது கட்சிசார்ந்து அனல் பறக்க விவாதம் நடத்துவது அந்தந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள்தாம். ஆனால், கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில், குறிப்பிட்ட பேச்சாளர் பெயரை இடம்பெறவிடாமல், 'அரசியல்' செய்திருப்பதும் அதைத் தொடர்ந்து அனல் பறக்கும் விவாதங்கள் கிளம்புவதுமாக அ.தி.மு.க-வில் தற்போது சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க சார்பில், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில், பங்கேற்றுவருபவர் ஆவடி குமார். ஆனால், நேற்று (3-1-18) அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பெயர்ப் பட்டியலில், ஆவடி குமார் பெயர் இடம்பெறவில்லை. இதைத்தொடர்ந்து, ''அம்மாவின் ஆசிபெற்ற பேச்சாளர் நான்; என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. தொடர்ந்து நான் ஊடக விவாதங்களில் கலந்துகொள்வேன்'' என்று சொல்லி அதிரடி கிளப்பியிருக்கிறார் ஆவடி குமார். அவரிடம் பேசினோம்....

''எதிர்க்கட்சியை எதிர்த்து உங்களது விவாதங்கள் சரி; ஆனால், உங்கள் கட்சிக்கு எதிராகவே பேச ஆரம்பித்திருக்கிறீர்களே?''

''அப்படியில்லை... அரசியலில் என்னுடைய வளர்ச்சிப் பிடிக்காதவர்கள் யாரோ சிலர்தான் என் பெயர் வரவிடாமல் செய்திருக்கிறார்கள். இது பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளிலேயும் நடக்கக்கூடியதுதான்''

''அ.தி.மு.க-விலேயே உங்களைப் பிடிக்காதவர்கள்தான் இப்படி எதிர் வேலை செய்திருப்பதாகச் சொல்கிறீர்களா?''

''ஆமாம்... நான் தொடர்ந்து ஊடக விவாதங்களில் பங்கேற்றால், அவர்களுடைய தனிப்பட்ட வளர்ச்சி பாதிக்கப்படும் அல்லது அவர்களது வளர்ச்சி தடைபடும் என்று நினைத்தவர்கள்தான் என்னை இருட்டடிப்பு செய்ய நினைத்திருக்கிறார்கள்.''

ஜெயலலிதா

''அப்படி உங்களுக்கு ஆகாதவர் என்று யாரை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள்?''

''எனக்கு ஆகாதவர் என்று குறிப்பிட்டு யாரையும் நான் சொல்வதற்கில்லை. ஆனால், பொதுவாக என் வளர்ச்சியால் அவர்களது முக்கியத்துவம் குறைந்திருப்பதாக நினைத்த யாரோதான் இதனைச் செய்திருப்பார்கள். இவர் இருந்தால் நமக்கு உரிய வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்திருப்பார்கள். மாறாக இந்தப் பெயர் பட்டியிலில் இல்லாதவரேகூட இதனைச் செய்திருக்கலாம். ஏனெனில், அரசியலைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு நபருக்கு ஊடகத்தில் முக்கியத்துவம் கிடைப்பதை யாருமே விரும்புவதில்லை என்பதுதான் உண்மை.''

''அப்படியென்றால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பேச்சாளர்கள்தான்....''

(கேள்வியை முடிப்பதற்குள்) ''அந்த லிஸ்டில் இருக்கும் வைகைச் செல்வனில் ஆரம்பித்து வளர்மதி வரை எல்லோருமே ஒவ்வொரு காலகட்டங்களில், வாதங்களில் பங்கேற்க பயந்துகொண்டு ஓடிப்போனவர்கள்தான். ஜே.சி.டி பிரபாகரனெல்லாம் ஒருமுறைகூட வாதங்களில் பங்கேற்றதேயில்லை."

''இந்தப் பேச்சாளர்களில் யாரோதான் உங்களுக்கு எதிராக வேலை செய்துவிட்டதாகச் சொல்கிறீர்களா?"

''ஆமாம்.... எல்லோரும் என்னிடம் நன்றாகப் பழகிக்கொண்டே திரைமறைவில் இதுபோன்ற காரியங்களைச் செய்துவிடுகிறார்கள். கடந்த காலங்களிலும் இதுபோல்தான் நடந்தது. ஆனாலும் என்னை யாராலும் தடை பண்ண முடியாது.''

எடப்பாடி பழனிசாமி

''கட்சித் தலைமையிடம் இதுகுறித்து பேசினீர்களா?''

''ஆமாம்.... முதல்வர், துணை முதல்வர் இருவரிடமும் பேசிவிட்டேன். பெயர் விடுபட்டுப்போனதாக அவர்களும் உணர்கிறார்கள். நிர்வாகக் கூட்டத்தில் கலந்துகொண்ட என்னைப் பிடிக்காதவர்கள்தான் என் பெயர் இடம்பெறவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். மற்றபடி கவனத்தில் வராமல் என் பெயர் விடுபட்டிருக்க வாய்ப்பில்லை.'' 

''மீண்டும் உங்கள் பெயர் செய்தித் தொடர்பாளர் பெயர்ப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளதா?"

''நிச்சயமாக அந்தப் பெயர்ப் பட்டியலில் என் பெயரைச் சேர்க்க வேண்டும்; சேர்க்கத்தான் செய்வார்கள். அதுவரை நான் காத்திருப்பேன்.''

''காத்திருப்பேன் என்கிறீர்கள்... ஆனால், தொடர்ந்து ஊடகத்தில் பேசப்போவதாக அறிவித்திருக்கிறீர்களே...?"

''ஆமாம்... நான் பேசக் கூடாது என்று யாரும் என்னைத் தடை செய்யவில்லையே... அதனால், தொடர்ந்து பேசுவேன்.''

''கட்சியில் டி.டி.வி தினகரன் தரப்பு நபர்களைக் களையெடுப்பதாகச் சொல்லித்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.... நீங்கள் டி.டி.வி தரப்பு ஆள் என்ற சந்தேகம் இதன் பின்னணியில் இருந்திருக்கலாமோ?''

''இல்லை இல்லை... நீக்கம் என்பது வேறு. கட்சியின் சார்பாகப் பலரும் பல்வேறு கருத்துகளைப் பேசக் கூடாது; ஒழுங்குப்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பின் பேரிலேயேதான் பட்டியல் தயார் செய்துள்ளதாகச் சொல்லியிருக்கிறார்கள்.''

ஓ.பன்னீர்செல்வம்

''இந்த அதிருப்தியில் நீங்கள் டி.டி.வி தினகரன் பக்கம் போவதற்கு வாய்ப்பிருக்கிறதா?"

''எனக்கு அதிருப்தியும் இல்லை; அதிர்ச்சியும் இல்லை. இதுவரையிலுமே என்னை யாரும் பேசச்சொல்லி அனுப்பியதில்லை. ஜெயலலிதா சொல்லிய ஒரு வார்த்தைக்காகத்தான் நான் பல்வேறு தடைகளைத் தாண்டியும் கட்சிக்காகப் பேசிவந்தேன். ஜெயலலிதா இருந்தவரையிலும் எனக்குப் பாதுகாப்பு இருந்துவந்தது. ஆனால், தற்போது கட்சியில் எனக்கு அந்தப் பாதுகாப்பு இல்லை. ஏனெனில், நான் எந்தத் தலைவரிடமும் எதற்காகவும் போய் நின்றதில்லை. தனிப்பட்ட எந்தத் தலைவரையும் சார்ந்து இயங்கியதும் இல்லை. கட்சி என்றைக்கும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது நிலைப்பாடு. அதனால் கட்சிக்குப் பாதகமான எந்த முடிவையும் நான் எடுக்கமாட்டேன்''

''ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணிகளிடையிலான பதவி பங்கு பிரித்தலில் நீங்கள் பலியாகிவிட்டதாகச் சொல்கிறீர்களா?"

''நீங்கள் சொல்வது ஓரளவு வேண்டுமானால், சரியானதாக இருக்கலாம். ஆனால், தனக்குப் பதவி வேண்டும்; தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சியின் எல்லா மட்டத்திலேயும் இருக்கும். அதற்கு ஏதாவது ஒரு காரணத்தைப் பயன்படுத்துவார்கள். அந்த வரிசையில் எனக்கு இந்தக் காரணத்தைச் சொல்வது அவர்களுக்கு வசதியாக இருந்திருக்கலாம்.''

''ஓ.பி.எஸ் தனி அணியாகச் செயல்பட்டபோது, அவர்களுக்கு எதிராக நீங்கள் காரசாரமாக வாதிட்டீர்கள். அதனாலேயே இப்போது அந்த அணியினர் உங்களைப் பலிவாங்குவதாக உணர்கிறீர்களா?''

''ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதேபோல் அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். ஆனால், அவருடன் இருப்பவர்கள் தனிப்பட்ட என்மீது ஏதேனும் காழ்ப்புஉணர்ச்சி கொண்டிருந்திருப்பார்களா.... என்ற கேள்விக்கு நான் விளக்கம் சொல்லமுடியாது."