`நாங்கள் சாக வேண்டுமோ?' - பாடைகட்டி போராட்டம் நடத்திய கட்டுமானத் தொழிலாளர்கள்

"மணல் பற்றாக்குறையைப் போக்கு, வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை  நீக்க வேண்டும். எம் சாண்ட்  உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் இன்று புதுகை பேருந்து  நிலையத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் மாட்டுவண்டி, லாரி, டிப்பர் தொழிலாளர்களும் இணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டதால், பேருந்து நிலையம் மற்றும் அதையொட்டிய சாலைகள் போக்குவரத்தால் ஸ்தம்பித்தன.


தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மணல் தட்டுப்பாடு தற்போது நிலவிவருகிறது. கடந்த நவம்பர்  மாதம் மணல் எடுக்க அரசு நடத்திவந்த குவாரிகளை மூடும்படி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப் பிறப்பித்து. இதனால் மணல் தடையின்றிக் கிடைப்பதில் மேலும் சிக்கல் எழுந்தது. தவிர, வெளிநாட்டிலிருந்து அதிலும் குறிப்பாக, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மிகக் குறைந்த விலைக்குக் கிடைத்து வந்தது. அதற்கும் கடந்த வருடம் தடை விதிக்கப்பட்டதால், நிலைமை மோசமாகிவிட்டது. அதிக விலைக்கு மணல் வாங்கி கட்டுமானப் பணிகளைச் செய்து வந்தனர். இந்தநிலையில், அதற்கும் தட்டுப்பாடு ஏற்படவே, தமிழ்நாடு முழுக்க கட்டுமானத் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதை நம்பி இருக்கும் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். அதிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய கட்டுமானப்பணிகள் அதிக அளவில் தற்போது நடைபெற்று வரும் சூழலில், இந்தக் கடுமையான மணல் தட்டுப்பாடு தொழிலை முடக்கிப் போட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இந்த சாலை மறியல் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில், பாடைகட்டி உடலை வைத்து ஒப்பாரி வைத்தார்கள். "எங்களைப் பாடையில் ஏற்றாதே. கட்டுமானத் தொழிலை முடக்காதே" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினார்கள்.

கட்டுமான பொறியாளர்கள், தொழிலாளர் கூட்டமைப்பின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் என்.சுப்பிரமணியன் பேசும்போது, "உலகம் முழுக்க இன்றைக்கு மாற்று மணல் முறையான `எம்.சாண்ட்'க்கு மாறிவிட்டது. அந்தத் தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டில் அதிக அளவில் தொடங்குவதுதான். தற்போது நிலவும் மணல் தட்டுப்பாட்டுப் பிரச்னை நிரந்தரமாக நீக்க ஒரே வழி. அதிலும் நமது புதுக்கோட்டை மாவட்டத்தில் எம்.சாண்ட் மாற்று மணல் உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள்கள் இயற்கையாகவே கொட்டிக்கிடக்கிறது. அதேபோல், கட்டுமானப் பணிகளும் நமது மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், மூலப்பொருளான மணல் கிடைக்கவில்லை. ஆகவே, இந்த அவலங்களை நிரந்தரமாக நீக்க எம்.சாண்ட் மணல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை இங்கு முதலில் ஆரம்பிக்க வேண்டும்" என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!