காஞ்சிபுரத்தில் முதல்முறையாகக் களமிறங்கும் ஜல்லிக்கட்டு! தயாராகும் ஏற்பாடுகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல்வரின் தேதிக்காக விழா ஏற்பாட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.

மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். ஜல்லிக்கட்டுக்கு பீட்டா என்ற வெளிநாட்டு அமைப்பு நீதிமன்றத்தில் தடைகோரியதால், உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. கடந்த ஜனவரியில் மெரினாவில் இளைஞர்கள் நடத்திய புரட்சியின் காரணமாக ஜல்லிக்கட்டுக்குத் தடைநீங்கியது. இதனால் தென்மாவட்டங்களில் மீண்டும் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து வருகிறது. வட மாவட்டங்களில் இதுவரை ஜல்லிக்கட்டு நடந்ததில்லை. ஜல்லிக்கட்டை வடமாவட்டங்களில் பிரபலப்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு

மாமல்லபுரம் அடுத்த கிருஷ்ணன்காரணை, கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த ஆய்வு செய்யப்பட்டது. கடலோரக் கடற்கரைப் பகுதி மணல் என்பதால், காளைகளுக்குப் பாதிப்பு ஏற்படும். அப்போது முதல்வர் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால், அந்த இடங்கள் தவிர்க்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கல்பாக்கம் அருகே உள்ள சீக்கினாங்குப்பத்தில் தனியாருக்குச் சொந்தமான மார்க் சுவர்ணபூமி பகுதியில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காகத் தென்மாவட்டங்களிலிருந்து சுமார் 400 காளை மாடுகளும் 4,000 மாடுபிடி வீரர்களும் இதில் பங்குபெறப்போவதாகச் சொல்கிறார்கள். முதல்வர் பழனிசாமி விழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர் அனுமதி கேட்டிருக்கிறார். முதல்வர் தரப்பில் அடுத்தவாரத்தில் ஒரு தேதி ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!