வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (04/01/2018)

கடைசி தொடர்பு:17:57 (09/07/2018)

``வார்டுகள் மறுவரையறை! நாளை மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு கெடு விதித்த கலெக்டர்

"கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மக்கள் தொகைக் கணக்கு மற்றும் பூலோக அடிப்படையில் வார்டுகள் மறுவரையறை குறித்து கருத்துகள், ஆட்சேபனைகள் குறித்து பொதுமக்கள் நாளை மாலை 5 மணி வரை சம்மந்தப்பட்ட அலுவலரிடம் எழுத்து மூலமாகக் கருத்து தெரிவிக்கலாம்" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கரூர் நகராட்சி, அலுவலகத்தில் வார்டுகள் மறுவரையறைத் தொடர்பாகக் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து பெறப்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில், "கரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ள வார்டுகள் மறுவரையறை கருத்துகள் 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் பொதுமக்கள் மக்கள் பிரநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பூலோக அடிப்படையில் வார்டுகள் மறுவரையறை செய்திட கடந்த 30.10.2017 முதல் பணிகள் தொடங்கப்பட்டு, 27.12.2017 பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது. இந்த மறுவரையறை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டம் 28.12.2017 அன்று
நடத்தப்பட்டு கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் கேட்கப்பட்டன.

மேலும்,பொதுமக்கள், தங்கள் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் தெரிவிப்பதற்காக நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 27.12.2017 முதல் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. கரூர் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மறுவரையறை குறித்து பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் பெரிய அளவிலான வரைபடம் வைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்வையிட்ட பொதுமக்களில் (03.01.2018) வரை 19 ஆட்சேபனை மனுக்கள் எழுத்து மூலமாகவும் குளித்தலை நகராட்சியில் 4 ஆட்சேபனை மனுக்கள் எழுத்து மூலமாகவும் பெறப்பட்டன. பேரூராட்சி வார்டுகளில் 3 மனுக்களும் கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் 62 நபர்களும் ஆட்சேபனை தெரிவித்து மனுக்கள் அளித்துள்ளனர். மேலும், வரைவு வார்டுகள் மறுவரையறை குறித்து கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிக்க விரும்புபவர்கள் நாளை (05.01.2018) மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம்" என்றார்.