வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (04/01/2018)

கடைசி தொடர்பு:18:45 (04/01/2018)

என்.எல்.சி தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைத் தோல்வி! திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாகப் புதுச்சேரியில் இன்று நடைபெற்ற இரண்டாம்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிவடைந்தது. திட்டமிட்டமிடபடி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

நெய்வேலி என்.எல்.சி-யில் பணிபுரியக்கூடிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 2012-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் மற்றும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட ஊதியம், அடிப்படை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 20-ம் தேதி புதுச்சேரியில் உள்ள உதவித் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில்  நடைபெற்றது. இதில் என்எல்சி நிர்வாகத் தரப்பில் இருந்து யாரும் கலந்துகொள்ளாததால் பேச்சுவார்த்தை இன்று ஒத்திவைக்கப்பட்டது.   இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் என்.எல்.சி நிர்வாகத் தரப்பினர், தொழிற் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடேசன், திட்டமிடப்படி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், வேலை நிறுத்தம் குறித்து வரும் 10-ம் தேதி நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்து வேலை நிறுத்த தேதி அறிவிக்கப்படும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க