`எப்பா முன்னாடியே சொல்லிருக்க கூடாதா?' - தமிழிசைக்கு மல்லிகைப்பூ விற்ற பாட்டி கலகல!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் நேற்று நடைபெற்ற தனியார் அறக்கட்டளைத் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காகத் தமிழிசை வந்தார். புதுக்கோட்டை வழியாகக் காரில் அவர் செல்லும்போது, ஆலங்குளம் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் அவரது கார் திடுதிப்பென்று நின்றது .பாதுகாப்புக்காக முன்னால் விரைந்துகொண்டிருந்த வாகனத்திலிருந்த போலீஸார் பதறி, அதே வேகத்தில் தங்களது வாகனத்தை ரிவர்ஸ் எடுத்து வந்தனர். சாலையின் நடுவில் தமிழிசை வந்த வாகனம் நின்றதால், பின்னால் வந்துகொண்டிருந்த மற்ற வாகனங்களும் வரிசைக்கட்டி நின்றன. விஷயம் தெரியாத உள்ளூர் வாசிகள் அலுவலகம் செல்லும் பரபரப்பில் டிஃராபிக் ஜாம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதி, தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டிருந்தார்கள். சில விநாடிகளில் அந்த இடத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டது.

இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபோதே, தமிழிசையின் கார் கதவைத்திறந்துக்கொண்டு, உதவியாளர் ஒருவர் ஓட்டமும் நடையுமாகச் சாலையைக் குறுக்கே கடந்து எதிர்ப்புறம் இருந்த சிறிய பூக்கடையை நெருங்கினார். அங்கிருந்த பாட்டியிடம் 100 ரூபாய்க்கு மல்லிகைப்பூ கேட்டு, 500 ரூபாய் நோட்டை நீட்டினார். அதற்கு அந்தப்பாட்டி, "காலையிலேயே 500 குடுத்தா எப்படி. நான் சில்லறைக்கு எங்கே போவேன்" என்று கேட்க, அருகில் இருந்த பழக்கடைக்காரர் காரில் தமிழிசை அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, சூழலைச் சட்டெனப் புரிந்துகொண்டு, ஐந்நூறு ரூபாய்க்கு சில்லறை கொடுத்தார். பூவையும் சில்லறையையும் வாங்கிக்கொண்டு விரைந்த அந்த உதவியாளர், பூவை தமிழிசையிடம் கொடுக்க, அதை வாங்கி மெல்லிய சிரிப்புடன் தன் தலையில் சூட்டிக்கொண்டார். அதன் பிறகு, அவர் கார் விரைந்து சென்றது.

நாம் அந்தப் பாட்டியிடம் சென்றோம். அதற்குள் அந்தப் பாட்டியைச் சூழ்ந்துக்கொண்ட அண்டைக்கடைக்காரர்கள், தமிழிசைக்குத்தான் பூ வாங்கிச் சென்றார்கள் என்ற தகவலைச் சொன்னார்கள். ஆனால், அந்தப்பாட்டியோ எந்தவித ஆச்சர்யத்துக்குள்ளாகாமல் பேரமைதியுடன் அமர்ந்திருந்தார். நாம் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். "எனக்கு யாருக்கு பூ வாங்கிட்டுப் போறாங்கனு தெரியாதப்பா. தமிழிசைன்னு சொன்னாங்க. பெரிய கட்சித்தலைவராம். முன்னாடியே சொல்லிருந்தா, அந்த அம்மாவைப் பார்த்து என் கஷ்டத்தைச் சொல்லி உதவி கேட்டிருப்பேன். போகவிட்டுச் சொல்றாங்க. அவங்களைத் துரத்திகிட்டா போவ முடியும்" என்றவரிடம், 'அப்படி என்ன கஷ்டம் பாட்டி உங்களுக்கு' என்று கேட்டோம். எனக்கென்ன கஷ்டம். வீட்டு வாடகை குடுக்க முடியலை. இந்தக்கடைக்கு பூவாங்க சமயத்துல காசு இருக்காது. அந்தச் சமயத்துல கடை போட முடியாது. அன்னிக்கு பட்டனிதான். இந்தக்கடையை மூடாம நடத்த கொஞ்சம் பணம் வேணும். இதுதான் என்னோட கஷ்டம். ஆனாலும், அந்தம்மாதான் இன்னிக்கு முதல் போணி. 100 ரூபாய்க்கு பூ வாங்கி எனக்கு சந்தோஷப்படுத்திட்டாங்க" என்று குழந்தையின் குதூகலத்துடன் பேசிய அந்தப் பாட்டியின் பெயர் சாரதா. வயது 70. கணவர் இறந்துவிட்டார். ஒரு மகன் ஒரு மகள். இந்தப்பாட்டிதான் பூ விற்கும் வருமானத்தில் தன் மகனுக்கு சோறு போடுகிறாராம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!