ஜல்லிக்கட்டு நடத்தினால் பிரச்னை வருமா? திண்டுக்கல் கலெக்டர் பதில் அளிக்க உத்தரவு

jallikattu

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்னாசி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "திண்டுக்கல் வெள்ளோடு கிராமத்தில் உள்ள புதுக்கோவில் புனித சந்தியாகப்பர் ஆலயம் சார்பாகப் பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அடுத்த மாதம்11-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. ஆகவே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வெள்ளோடு கிராமத்தில் இரு தரப்பினரிடையே பிரச்னை உள்ளது. ஆகவே, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி, அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!