வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (04/01/2018)

கடைசி தொடர்பு:19:15 (04/01/2018)

குமரி எஸ்.பி ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியானது எப்படி - பரபர தகவல்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி துரை தற்போது மாற்றப்பட்டு புதிய எஸ்.பி.யாக ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர்
4-ம் தேதிதான் எஸ்.பி துரை கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றபின் ஹெல்மெட் சோதனையும் தீவிரமாக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை ஒகி புயல் சேதப்படுத்தியது. அதனால் லட்சக்கணக்கான மரங்களும் பல நூறு மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. ஒகி புயல் ஏற்பட்ட அன்று முதல் காவல் துறையினரையும் மீட்புப் பணிகளில் ஈடுபட எஸ்.பி துரை உத்தரவிட்டார். அவரும் களத்தில் இறங்கி வேலை செய்தார். காவல்துறையினர் மின்சார வாரிய ஊழியார்களுடன் இணைந்து வேகமாகச் செயல்பட்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பார்வையிட வந்தார்கள்.

கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரிக்கு ஆய்வுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தார். அன்றைய தினம் மீனவர்கள் சுமார் 7,000 பேர் திரண்டு குழித்துறையில் ரயில் மறியல் போராட்டம் செய்தனர். அதனால் ஆளுநரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அவர் செல்லும் வழித்தடங்களும் மாற்றப்பட்டன. இறுதிவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஆளுநரின் பயணம் முடிந்தது. அதேபோல் கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் போன்றவர்கள் கன்னியாகுமரிக்கு வந்தபோதும் பாதுகாப்புப் பணிகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு எஸ்.பி துரையும் அழைக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சென்னை சென்று வந்தார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆளுநரின் பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி-யாக உள்ள பிரவீன்குமார் அபிமன்யூ மாற்றப்பட்டு, ஆளுநரின் பாதுகாப்புப் பிரிவு புதிய எஸ்.பி-யாகத் துரை நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. துரைக்குப் பதிலாகக் குமரி மாவட்டத்துக்கு சென்னை சி.பி.சி.ஐ.டி பிரிவு எஸ்.பி ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த வாரம் கன்னியாகுமரி மாவட்டத்தின் 50 வது எஸ்.பி-யாக பொறுப்பேற்க உள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க