தடையை மீறிய பிரேமலதா கைது! போலீஸுடன் கடும் வாக்குவாதம்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காத கடலூர் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்ட தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து தே.மு.தி.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு 42 சர்க்கரை ஆலைகள் சுமார் 1600 கோடி ரூபாய் நிலுவைத் தொகை பாக்கி வைத்துள்ளது. இதனை கண்டித்து தே.மு.தி.க. அந்தந்தப் பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைகளை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் இ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையை பிரேமலதா விஜயகாந்த் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது அவர், " இ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் மட்டும் 170 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. அதை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அத்தோடு, விவசாயிகள் கொண்டுசெல்லும் கரும்புக்குச் சரியான எடையில்லை. அதனால் சர்க்கரை ஆலையில் செயல்படும் எடைமேடையை அரசே ஏற்று நடத்த வேண்டும். கரும்புக் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும்" என்றார்.

பின்னர், மேடையைவிட்டு இறங்கிய பிரேமலதா விஜயகாந் திடீரென்று சர்க்கரை ஆலையை முற்றுகையிட முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், தடையை மீறி சென்றால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். இதனால், இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் தனது தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால், போலீஸார் பிரேமலதா விஜயகாந்த் உட்பட நூற்றுக்கணக்கான தே.மு.தி.க. தொண்டர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!