`15 ஆண்டுகளாக இழப்பீடு வழங்கவில்லை' - கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியது உயர் நீதிமன்றம்

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கரூர் அருகே கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை விவசாயிகளுக்குத் குத்தகைக்கு விட்டு அதில் வரும் வருமானம் கோயில் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாந்தோணி கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான 16 ஹெக்டேர் புன்செய் நிலம் இருந்தது. இந்த இடத்தை எவ்வித அனுமதியுமின்றி நில ஆர்ஜித சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் அமைப்பதற்கு அரசு கையகப்படுத்தி தற்போது அந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் சந்தை மதிப்புபடி அனுமதியின்றி கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டைக் கோயிலுக்கு வழங்கவில்லை.

இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியருக்கும் அரசுக்கும் பல முறை மனு செய்தும் எவ்வித பயனும் இல்லை. மேலும், கோயில் நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, கோயில் நிலத்தில் விதிமீறி கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்கு இன்றைய சந்தை மதிப்புள்ள தொகையைக் கோயில் நிர்வாகத்திடம் வழங்க உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் கொண்ட அமர்வு, இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு மனு மீதான விசாரனையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!