வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (04/01/2018)

கடைசி தொடர்பு:20:30 (04/01/2018)

அனல்பறந்த கருத்துக்கேட்பு கூட்டம்... ஓட்டம் பிடித்த அதிகாரிகள்

ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டத்துக்காகக் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வந்த அதிகாரிகளைக் கிராம மக்கள் விரட்டியடித்ததால் கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

எரிவாயு குழாய் பதிப்புக்கு மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம் ஓ.என்.ஜி.சி எரிவாயு சேமிப்பு நிலையத்திலிருந்து இயற்கை எரிவாயுவைக் குழாய் மூலம் எடுத்துச் சென்று தூத்துக்குடியில் உள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக எரிவாயு அனுப்பும் நிலையம் ராமநாதபுரத்திலும் குழாய் சுத்தம் செய்வதற்கான இடைநிலை நிலையம் மறவர்கரிசல்குளம் கிராமத்திலும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இத்திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 26 கிராமங்கள் வழியாகச் செயல்படுத்த உள்ள நிலையில் அக்கிராம மக்கள் தங்கள் கிராமங்களின் வழியாகக் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இத்திட்டம் தொடர்பாக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் கருத்து கேட்புக் கூட்டம் சாயல்குடியில் இன்று நடைபெற இருந்தது.

தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், ஓ.என்.ஜி.சி தென்மண்டலப் பொது மேலாளர் தங்கராஜ் ஆகியோர் பங்கேற்று திட்டம் தொடர்பான கருத்துகளைக் கேட்கத் தொடங்கினார். இந்நிலையில் அங்கு கூடியிருந்த தெற்குகாட்டூர் கிராமமக்கள், சாயல்குடியைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயச் சங்கத்தினர், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சமூக செயல்பாட்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு கூடியிருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்த கூடாது என முழக்கமிட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி அங்கிருந்து வெளியேறிச் சென்றார். இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூட்டம் நடக்க இருந்த மண்டபத்தைவிட்டு வெளியேற வலியுறுத்தி கிராம மக்கள் கூச்சலிட்டு அதிகாரிகளைச் சுற்றி வளைத்தனர். அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸார் அதிகாரிகளை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால், கருத்து கேட்புக் கூட்டம் தொடங்கப்படாமலே ஒத்தி வைக்கப்பட்டது. எரிவாயு குழாய் அமைப்பதற்கு ராமநாதபுரம் மாவட்ட மக்களிடையே எழுந்த எதிர்ப்பின் விளைவாக எரிவாயுத் திட்டங்களுக்கு எதிரான போராட்டம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.