வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (04/01/2018)

கடைசி தொடர்பு:23:00 (04/01/2018)

சென்னை மாவட்டம் விரிவாக்கம்..!

பதினாறு வட்டங்களை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார். 

சென்னை மாவட்டத்தின் எல்லை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள 67 வருவாய் கிராமங்களும் இணைக்கப்பட்டது. இதன்மூலம், சென்னை மாவட்டத்துக்குள் 122 வருவாய் கிராமங்கள் வருகின்றன. 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கிய பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு இணையாக சென்னை மாவட்டமும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் உள்ளிட்ட 47 கிராமங்கள் உள்ளன. தண்டையார்பேட்டையைத் தலைமையிடமாக வட சென்னைக்கோட்டத்தில் திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட 32 கிராமங்கள் அடங்கியுள்ளன. கிண்டியைத் தலைமையிடமாகக் கொண்ட தென் சென்னைக் கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, உள்ளிட்ட 43 கிராமங்கள் உள்ளன.