வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (04/01/2018)

கடைசி தொடர்பு:18:52 (04/01/2018)

மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதுமண்டபம் பொலிவிழக்கிறதா?

பழம்பெருமையும் தொன்மைச் சிறப்பும் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்று சொன்னாலே முதலில் நம் நினைவுக்கு வருவது புதுமண்டபம் என்னும் வசந்த மண்டபமும், தெப்பக்குளமும்தான். கோயிலுக்கு முன்பாக அமைந்திருக்கும் மண்டபம், திருமலைநாயக்கரால் கட்டப்பட்டது. கோடைக்காலத்தில் இந்த மண்டபத்தில்தான் வசந்த விழா நடைபெற்று வந்தது. அதன் காரணமாக வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட இந்த மண்டபம் தற்போது புதுமண்டபம் என்ற பெயரில் வணிக வளாகமாக மாறியுள்ளது. மண்டபத்தைச் சுற்றிலும் வியாபாரிகள் கடை வைத்துள்ளனர்.

Pudhumandabam
மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதுமண்டபம்

கோயில் திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகளுக்குத் தேவையான அனைத்து வகைப் பொருள்களும் இந்த வணிக வளாகத்தில் கிடைக்கிறது. எனவே, மதுரை தவிர வெளி மாவட்டங்களில் இருந்தும்கூட எண்ணற்ற மக்கள் இந்த வணிக வளாகத்துக்கு வந்து பொருள்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.

கோயிலின் புனிதமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் புது மண்டபம், முன்பெல்லாம் பொலிவுடன் இருந்து வந்துள்ளது. கல்லால் செதுக்கப்பட்ட சிலைகள் அத்தனை நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். தலைசிறந்த சிற்பக் கலைஞர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த மண்டபம் தற்போது பொலிவிழந்து காணப்படுவதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் தகாத செயல்கள் நடைபெறுவதாகவும் குமுறலுடன் கூறுகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை அறிவதற்காக நாம் நேரில் சென்று பார்த்தோம்.பிரமாண்டமான பிரதோஷ நந்தியின் முன்பாக உள்ள வாயில் வழியாகச் சென்று புதுமண்டபத்தைச் சுற்றிப்பார்த்தோம் மண்பத்தின் மேற்கூரைகள் அனைத்தும் கல்லில் துரு ஏறியது போல காட்சியளித்தது. பல இடங்களில் பறவைகளின் எச்சம் காணப்பட்டது. அங்கங்கே சிலந்திகள் வலை பின்னியிருந்தன. பறக்கும் குதிரைகளும், ராவணன் உள்ளிட்ட பல சிற்பங்களும் சிதிலமடைந்து காணப்பட்டன. மண்டபத்தின் வெளிப்புறக் கூரையிலும் பல இடங்கள் உடைந்த நிலையில் காணப்பட்டன.

Ravanan
ராவணன்

புதுமண்டபம் தொடர்பாக மக்களிடையே சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றித் தெரிந்துகொள்வதற்காக, பி.ஜே.பி.யின் மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஹரிகரசுதனிடம் விசாரித்தோம்.

''புதுமண்டபம் பல வரலாற்று நிகழ்வுகளைத் தன்னகத்தே கொண்டது. ஆனால், தற்போது புதுமண்டபம் வெறும் வியாபார ஸ்தலமாக மட்டுமே காணப்படுகிறது. கடைகளுக்கு மத்தியில் இருக்கும் புதுமண்டபம் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கோ, கோயில் நடை திறக்கும்வரை காத்திருப்பதற்கோ பயன்படுவதில்லை. பெரும்பாலும் மண்டபம் பூட்டியேதான் காணப்படுகிறது. விசேஷ நாள்களில் மட்டும்தான் திறக்கப்படுகிறது. அப்போதும்கூட முறையாக சுத்தம் செய்வதில்லை. பி.ஜே.பி சார்பாக பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மண்டபத்தின் அசுத்தமான நிலையை மாற்ற வேண்டும். மேலும் கோயில் விதிமுறைகளைத் தவறான முறையில் பயன்படுத்திக்கொண்டு, ஒருவரே வேறு வேறு பெயர்களில் புதுமண்டபத்தைச் சுற்றியுள்ள கடைகளைத் தங்கள் பெயரில் பதிந்துகொள்கின்றனர். இதுபோன்ற இடையூறுகளைக் களைவதுடன், புதுமண்டபத்தையும் நன்றாகப் பராமரிக்க வேண்டும். அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய தனியிடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும். சமூகவிரோதிகள் நுழையாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆயிரம்கால் மண்டபம் போலவே புது மண்டபத்தையும் பேணிக் காக்க வேண்டும் . புதுமண்டபத்துக்கு ஆன்லைன் முறையில் வசூல் செய்யும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் கட்டணக் கொள்ளைகள் தவிர்க்கப்படும். மீனாட்சியம்மன் கோயில் மத்தியத் தொகுதியில்தான் வருகிறது. இந்தத் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. தி.மு.க ஆட்சி வந்தால் சிறப்பாகக் கோயிலைப் பாதுகாப்போம் எனத் தெரிவிக்கிறார். ஆனால், அவர்கள் ஆட்சிக்காலத்தில் பல முறைகேடுகள் நடந்தது பற்றி அவருக்குத் தெரியாதா ? மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் இந்தப் புதுமண்டபத்தை பாதுகாக்க வேண்டும் அதற்கான உதவியைச் செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் அதனை ஏற்று புதுமண்டபத்தை சரிசெய்யும் வேலைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்று கூறினார்.

Damaged roof of Pudhumandabam
புதுமண்டபம் கூரை

தொடர்ந்து இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக் கண்ணனிடம் பேசியபோது, “புது மண்டபம் பொலிவு இழந்தும் சரியான பராமரிப்பும் இல்லாமல் இருப்பது உண்மைதான். மண்டபத்தைச் சுற்றிலும் நெருக்கமாகக் கடைகளை வைத்திருப்பதால், அங்குள்ள சிற்பங்களின் அழகை ரசிக்க முடியவில்லை. நெருக்கடி காரணமாக பக்தர்கள் சாப்பிடக்கூட இடம் இல்லாத சூழல் உள்ளது . பலமுறை சொல்லியும் இந்தப் பிரச்னை முடிவுக்கு வராமல் உள்ளது . எனவே, அங்கே கடைகளை வைத்து சம்பாதிப்பதை விட்டு, பாரம்பர்யத்தைப் பாதுகாக்க வேண்டும். அங்கு உள்ள வியாபரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க வேறு இடங்களில் அவர்களுக்குக் கடைகள் வைத்துக்கொடுக்கலாம். புதுமண்டபம் முழுவதும் நூலாம்படை அடைந்துகிடக்கிறது. கோயிலாக பாதுகாக்கவேண்டிய இடத்தில் செருப்புகளைப் போட்டு நடக்கின்றனர். எழுகடல் தெருவில் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் சீர்கெட்டுக் கிடக்கிறது. மீனாட்சியம்மன் கோயில் சுத்தமாக உள்ளது என்று விருது வாங்கியுள்ளது. ஆனால், உண்மையில் முறையான குடிநீர் அமைப்பும் , கழிப்பறை வசதிகளும் இல்லாத சூழல்தான் உள்ளது. எனவே எல்லா வசதிகளையும் செய்துதர வேண்டும் மேலும் தினம் தினம் பல லட்சம் மக்கள் வந்து செல்லும் இடத்தில் மருத்துவ வசதிகள் இல்லாமல் உள்ளதால், கோயிலுக்கு என்று தனி மருத்துவக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும்'' என்று தன் ஆதங்கத்தையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.

Pudhumandabam outside view of roof
புதுமண்டபம்

புதுமண்டபத்தில் கடைவைத்து நடத்தி வரும் முத்துப்பாண்டியிடம் பேசினோம். ''புதுமண்டபம் தற்போது பாதுகாப்பாகத்தான் உள்ளது . பாதுகாக்க வேண்டும் என்று என்ன அர்த்தத்தில் சொல்கிறார்கள்? சிலைகளை மாற்றவேண்டுமா அல்லது கற்களை மாற்றவேண்டுமா? அப்படிச் செய்தால் பழைமை மாறிவிடும். இப்போது இருப்பதுபோலவே இருந்தால் மண்டபம் நல்லபடியாக இருக்கும். இங்குள்ள ஒவ்வொரு தூணுக்கும்கூட உயிர் உண்டு. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள்கூட இந்தத் தூண்களின் அழகை ரசித்துவிட்டுச் செல்கின்றனர். இந்த மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதி வியாபார ஸ்தலமாக விளங்குவதால்தான் மண்டபத்தைப் பாதுகாக்க முடிகிறது . இல்லை என்றால் இந்த மண்டபம் பாழடைந்து போயிருக்கும். நாம் என்ன வேண்டுமானாலும் குறை கூறலாம் இது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாது. மிகக் குறைந்த அளவுதான் கோயில் நிர்வாகம் பணம் வசூலிக்கிறது அதனால் பல நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு கடைகள் வைத்து பிழைத்து வருகிறார்கள். நாம் எத்தனை முறை சுத்தம் செய்தாலும் இங்கு வரும் பறவைகளின் எச்சங்களை நீக்க முடியாது அதை நாம் புரிந்துகொண்டு வாழவேண்டும் புறாக்கள் எச்சமிடுகிறது என்று அவற்றை விரட்டமுடியாது . விழாக்காலங்களில் சுத்தம் செய்யலாம். இவ்வாறு நல்லபடியாக கோயிலையும் இந்த மண்டபத்தையும் கோயில் நிர்வாகம் கவனிக்கவில்லை என்றால் எப்படி மீனாட்சியம்மன் கோயிலுக்கு விருதுகிடைத்திருக்கும். தற்போது இருக்கும் ஜே.சி நல்ல முறையில் கோயிலை கவனித்துவருகிறார்'' என்று மாறுபட்டக் கருத்தைத் தெரிவித்தார்.

Soldiers on the horses
குதிரை வீரர்கள் சிலைகள்

புதுமண்டப பராமரிப்பைப் பற்றியும், பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் பற்றியும் தெரிந்துகொள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையரிடம் பேச முயற்சி செய்தோம். பலமுறை தொடர்பு கொண்டும் அவரைச் சந்திக்கமுடியவில்லை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலகப் புகழ் பெற்ற திருக்கோயில். கோயில் சார்ந்த புதுமண்டபத்தை முழு ஆய்வு செய்து, எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றியும், இங்குள்ள வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க செய்யவேண்டிய ஏற்பாடுகள் பற்றியும் அரசும், அறநிலையத்துறை அதிகாரிகளும் ஆலோசித்து, செயல்படுத்த வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்