காதலுக்காக விழுந்த 'மான் குத்து!' - எஸ்.பி அலுவலகத்தை எகிறவைத்த தகராறு

ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலக வளாகத்திற்குள் காதல் திருமணத் தகராறு காரணமாக இரு தரப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதோடு மான் கொம்பால் குத்தி ரத்தம் கொட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக எஸ்.பி. அலுவலக காவலர்கள் ஓடி வந்து தடுத்தார்கள். படுகாயமடைந்தவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஏ.எஸ்.எம். நகரைச் சேர்ந்தவர் ஹனீபா இவரது மகன் இப்ராஹீம் (23). இவர் அப்பகுதியில் மொபைல் ஷாப் வைத்திருக்கிறார். அந்தியூர் முத்துக்குமாரசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் நஜூமுதின் இவரது மகள் நஸ்ரின் (20). இப்ராஹீமும், நஸ்ரினும் 2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தார்கள். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளுவதாக முடிவெடுத்து இரண்டு நாள்களுக்கு முன்பு ஈரோடு ரயில்வே காலணியில் உள்ள இப்ராஹீம் உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்கிருக்கும் மசூதியில் திருமணம் செய்துகொண்டார்கள். நேற்று காலை ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்திற்குள் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்கள்.

அதையடுத்து மகளிர் காவல் துறையினர் இரு வீட்டாருக்கும் தகவல் கொடுத்தார்கள். காலை இரு வீட்டுக் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் வந்திருந்தார்கள். அனைவரும் ஈரோடு எஸ்.பி. அலுவலக வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது நஸ்ரின் பெரியப்பா நஸ்ரினிடம் பேச முயற்சி செய்துள்ளார். அதற்கு இப்ராஹீம் தடுத்ததை அடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இரு தரப்பினருக்கும் கைக்கலப்பு ஏற்பட்டது. பெண் தரப்பு சார்பாக வந்திருந்த மனித நேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஷானவாஸ், இப்ராஹீமின் அப்பா ஹனீபாவை அடித்தார். அப்போது, ஹனீபா இடுப்பில் மறைத்து வைத்திருந்த மான் கொம்பை எடுத்து ஷானவாஸின் முதுகில் குத்தினார். அதனால் ரத்தம் வழிந்தோடியது. பிறகு காவல்துறையினர் ஓடி வந்து தடுத்து நிறுத்தினார்கள். குத்துப்பட்ட ஷானவாஸ் ரத்த வெள்ளத்தில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குத்திய இப்ராஹீமின் தந்தை ஹனீபா காவல்துறை கஸ்டடியில் உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!