'வீரனாக வாங்க; இல்லன்னா வீட்டுல உட்காருங்க'- ரஜினி, கமலை சீண்டும் பிரேமலதா

''பிரஸ் மைக்கை பார்த்தா பயமா இருக்கு... கொள்கை என்னான்னா தலை சுத்துது... ட்விட்டரில் கட்சி.. தலை சுத்துறவங்க வீட்ல இருக்கலாம்ல. எதுக்குக் கட்சி'' என்று ரஜினி, கமலை விளசியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில், கரும்பு விவசாயிகளுக்குக் கொடுக்கவேண்டிய நிலுவைத்தொகையைக் கொடுக்காத இ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையை இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் செய்தார் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. அப்போது அவர், "ஒகி புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கட்டாயம் தே.மு.தி.க. வலியுறுத்தும். கடந்த ஓராண்டாக தமிழகத்தில், விவசாயிகள் பிரச்னை, வேலை வாய்ப்பு இல்லை, கல்வி வளர்ச்சி இல்லை. சாலை வசதி இல்லை. பிறகு, எதில்தான் வளர்ச்சி என்று பார்த்தால் சரக்கில்தான். கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் 170 கோடி வருமானம். இந்த வருடம் 200 கோடியை எட்டியிருக்கிறது. இதில் ஒன்றுதான் தமிழகம் முன்னேற்றம்.

தமிழகத்தில் மணல் கொள்ளையானாலும் சரி, விவசாயிகள் பிரச்னையானாலும் சரி, மக்கள் பிரச்னையானாலும் சரி முதலில் களத்தில் நிற்பது தே.மு.தி.க.தான். அரசு நினைத்தால், இங்கு இருக்கும் தொழிற்சாலைகள் அனைத்தையும் லாபகரத்தில் இயக்க முடியும். அதனால் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும். ஆனால் இவர்கள் தங்கள் சுயநலத்துக்காக, ஊழலுக்காக, லஞ்சத்துக்காக பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் அனைத்துத் தொழிற்சாலைகளும் நலிவுற்றுக் கிடக்கிறது. வங்கி மூலமாக விவசாயி ஒருவன் ட்ராக்டர் கடன் பெற்று அதை கட்டாவிட்டால் அவனை சாகடிக்கும் வங்கியும், அரசும் விஜய் மல்லையாவை கைது செய்யாதது ஏன்.

மக்களைப் பற்றி கவனிக்காத அரசு, ஈ.பி.எஸ்ஸா, ஓ.பி.எஸ்ஸா, சசிகலாவா, டி.டி.வி.தினகரனா என்று தினம் ஒரு கூத்து நடத்திகிட்டு இருக்கு. இது போதாதென்று, இதுவரைக்கும் தூங்கிகிட்டு இருந்தவங்க திடீர் திடீர் என்று கட்சி ஆரம்பிக்கப்போறேன், அத... ஆரம்பிக்கப்போறேன் என்கிறார்கள். யாரு வேண்டுமானாலும் வாங்க. எங்களுக்கு அதைப் பற்றி பிரச்னையில்லை. ஆனால், கேப்டனை மாதிரி, மக்களுக்காக களத்தில் இறங்கிப் போராடும் ஒரு வீரனாக வாங்க. அதைவிட்டுட்டு, பிரஸ் மைக்கை பார்த்தா பயமா இருக்கு, கொள்கை என்னான்னா தலை சுத்துது, எதுக்கு... தலை சுத்துறவங்க வீட்ல நிம்மதியா இருக்கலாம்ல. வீட்டுக்குள்ள, ஒரு ரூமுக்குள்ள உட்கார்ந்துகிட்டு ட்விட்டர்ல எல்லாம் கட்சி பண்ண முடியாது. மக்களுக்காகக் களத்தில் இறங்கிப் போராடணும்" என்று ரஜினி, கமலை ஒரு விளாசு விளாசி, தனது தொண்டர்களின் ரத்தத்தை சூடாக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!