``சுவரெங்கும் இயற்கை ஓவியங்கள்!'' அசத்தும் அரசுப் பள்ளி

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது வெள்ளியணை. இந்தக் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் மாணவர்களுக்கு இயற்கை குறித்த விழிப்பு உணர்வு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இயற்கை சம்பந்தமான பேரிடர்கள், பிரச்னைகள் ஏற்பட்டால், அதுசம்பந்தமாக உடனே மாணவர்களுக்குக் காணொளிக் காட்சிகள் மூலம் விளக்கம் கொடுக்கிறார். அதேபோல், இயற்கையைப் பாதுகாப்பது சம்பந்தமாக மாதத்துக்கு ஒருமுறை மாணவர்களுக்கு ஓவியம், பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்துகிறார். பள்ளி வளாகம் மட்டுமின்றி வெள்ளியணை பகுதி முழுக்க எண்ணற்ற மரக்கன்றுகளை நட்டு, மாணவர்கள் மூலம் பராமரித்து வருகிறார். அந்த வகையில், தங்கள் பள்ளி வளாகத்தைச் சுத்தியுள்ள காம்பவுண்ட் சுவர்களில் இயற்கை குறித்த ஓவியங்களையும் வாசகங்களையும் வரைந்தும் எழுதியும் வைத்திருக்கிறார்.


 

ஒரு பகுதியில், மரங்களாலான பூமி உருண்டை ஓவியத்தை வரைந்து, 'புதியதோர் உலகம் செய்வோம்' என்று எழுதபட்டிருக்கிறது. அடுத்து, காடுகள், மலை, விலங்குகளை வரைந்து,  கிரீன், பீஸ் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அருகிலேயே மரங்கள் சம்பந்தமான ஓவியங்களை வரைந்து, 'மரங்களை அரவணைப்போம்' என்று எழுதப்பட்டிருக்கிறது. 'மரங்களைக் காப்போம்; பூமியை நேசிப்போம்' என்றும் இயற்கையாகக் கிடைக்கும் நீரைவிட்டு, நாம் இயற்கைக்கு மாறாகச் சேகரிக்கும் நீரை சுட்டிக்காட்டியும் விழிப்பு உணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.


 

நம்மிடம் பேசிய தர்மலிங்கம், "மாணவர்களுக்கு சிறு வயதிலேயே இயற்கை குறித்த பாடத்தைப் போதித்துவிடுவதுதான் வருங்கால பூமி காக்கப்படும் செயலாக அமையும். அவர்களின் கண்களில் எந்நேரமும் இயற்கை குறித்த கற்பிதங்கள் பட வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் சுவர் முழுக்க இயற்கை குறித்த விழிப்பு உணர்வு ஓவியங்களையும் வாக்கியங்களையும் வரைந்திருக்கிறோம்" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!