"ஹோஹோய் ஜல்லிக்கட்டு டோய்!" குதூகலத்தில் மதுரை | Jallikattu starts in Madurai on a festive note

வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (04/01/2018)

கடைசி தொடர்பு:20:55 (04/01/2018)

"ஹோஹோய் ஜல்லிக்கட்டு டோய்!" குதூகலத்தில் மதுரை

நடைபெறப்போகும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை எதிர்நோக்கி மதுரை மாவட்டமே  திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. கடந்த வருடம்போல எந்தப் பதற்றமும் இல்லாமல், இந்தாண்டுப் போட்டிகள் நடக்கவிருப்பதால் மக்களின் முகத்தில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தினமும் காளைகளுக்குப் பயிற்சியளித்தும், மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கியும் பயிற்சி எடுத்து வருகிறார்கள். 

 கடந்த வருடம் இதே நாள்களில் தமிழகம் எப்படியிருந்தது.... நினைத்துப் பாருங்கள்.

இளைஞர்களின் போராட்ட உஷ்ணத்தில் நாடே தகித்தது. அதுபோன்றதோர் இளைஞர் எழுச்சி இனி தமிழகத்தில் ஏற்படுமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், சாதி மதம் கடந்து ஒட்டுமொத்த தமிழகமும் சென்னை மெரினா, மதுரை தமுக்கம், அலங்காநல்லூர், கோவை, திருச்சி, நெல்லை என்று இடைவெளி இல்லாத வகையில் போராட்டங்களை நடத்தினார்கள். இங்கு மட்டுமா? தமிழர்கள் வாழும் அயல் நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. தங்கள் பிள்ளைகள் போராட்டத்தில் கலந்துகொள்வதைப் பெற்றோர்கள் பெருமையாக நினைத்த காலகட்டமும் அதுதான். அதிலும் பெண் பிள்ளைகள் நள்ளிரவிலும் போராட்டம் நடத்தியதைப் பற்றி விவரிக்க முடியாது. இது, அனைத்துக்கும் மையப்புள்ளியாக அமைந்தது ஜல்லிக்கட்டு.

 

ஜல்லிக்கட்டு

 

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்குச் சில வெளிநாட்டு என்.ஜி.ஓ-க்களின் பின்னணியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கால் அதை நடத்துவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டது. அதற்குச் சில வருடங்களாகவே இப்பிரச்னை நீடித்துவந்தது. இதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் காங்கிரஸ் அரசும், அதற்குப்பின் வந்த பி.ஜே.பி. அரசும் அமைதி காத்ததால் கடந்த வருடம் வெகுண்டெழுந்தனர் தமிழ் மக்கள். கீழடி, ஜல்லிக்கட்டு போன்ற தமிழரின் பண்பாட்டு விழுமியங்களை அழிக்கும் வகையில் மத்திய பி.ஜே.பி. அரசு தீவிரமாகச்  செயல்பட்டு வருகிறது என்ற உணர்வால், ஒட்டுமொத்த தமிழர்களும் உந்தப்பட்டு தீவிரமான போராட்டத்தில் இறங்கினார்கள். அப்போராட்டத்தின் முடிவில் காவல் துறையின் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டாலும், அதுவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் காரணமானது.

 அந்த அடிப்படையில், இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் பல மாவட்டங்களிலும் தொடங்கிவிட்டன. இந்த நிலையில், கடந்த மாதம் ஜல்லிக்கட்டைத் தடைசெய்ய விலங்குகள் நல வாரியம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அந்த வழக்கை தள்ளிவைத்துள்ள உச்ச நீதிமன்றம், இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அறிவித்ததால், தமிழக அரசும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் நிம்மதியடைந்தார்கள். 

 இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பினை கலெக்டர் வீரராகவ ராவ் அறிவித்தார். மாவட்டத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் புகழ்பெற்ற பொங்கல் திருநாளுடன் நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட நிர்வாகமே முழுமையாக இறங்கி ஏற்பாடுகளைச் செய்யும். அதற்கான அனைத்துத் துறையினருடன்கூடிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. 

நடைபெற்று வரும் ஏற்பாடுகள், ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் பற்றி நம்மிடம் பேசிய மதுரை கலெக்டர் வீரராகவ ராவ், ''அவனியாபுரத்தில் 14-ம் தேதியும், பாலமேட்டில் 15-ம் தேதியும், அலங்காநல்லூரில் 16-ம் தேதியும்  நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்தாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் காலை எட்டு மணியிலிருந்து மாலை மூன்று மணிவரை நடைபெறவுள்ளது. ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. 10 ஆம்புலன்ஸ்கள், 3 தீயணைப்பு வாகனங்கள், 10 மருத்துவக் குழு என அனைத்தும் தயார் நிலையில் இருக்கும். 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு அளிப்பார்கள். அதுபோலப் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள், கால்நடைத் துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்படும். ஊக்க மருந்து, போதை மருந்து பயன்டுத்தப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்படும். கட்டவிழ்த்து விடுவதற்கு இருபது நிமிடங்கள் முன்புவரை காளைகள் ஓய்வில் இருக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காளைகளின் உரிமையாளர்கள், அதற்குத் தேவையான தீவனத்தையும் தண்ணீரையும் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். வெயில் படாமல் கூரை அமைக்கப்படும். அதுபோல காளைகளின் மூக்குக் கயிறுகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். காளைகள் வாடிவாசலிலிருந்து வரும்போது வீரர்கள் எதிரில் நிற்கக் கூடாது. அதுபோல மாடுகளின் கொம்புகளையோ, வாலையோ பிடிக்கக் கூடாது. காளைகளின் கால்களைப் பற்றக் கூடாது, மைதானத்தில் தேங்காய் நார்களால் தளம் அமைக்கப்படும்,  ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அவசர வழிகள் ஏற்படுத்தப்படும்'' என்று பல்வேறு விதிகளைப் பற்றி எடுத்துச் சொன்னார்.

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் அவனியாபுரம் மதுரை மாநகராட்சி எல்லைக்குள் வருவதால், இதில் மாநகராட்சி கமிஷனரும், போலீஸ் கமிஷனரும் கூடுதலாகப் பொறுப்பேற்கிறார்கள். அந்த வகையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை கலெக்டர் சென்று பார்வையிட்டார். 

இன்று காலை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவுக்குப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 14-ம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறுவதால் அதைத்தொடர்ந்து இன்று காலை அவனியாபுரத்தில் ஊர்ப் பெரியவர்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு அவனியாபுரம் கோயிலருகே சிறப்புப் பூஜைகள் செய்து  பந்தக்காலை நட்டனர். கடந்த வருடம்போல் கடுமையான கெடுபிடிகள் இல்லாமல் ஜல்லிக்கட்டுக்கான வேலைகள் தொடங்கியதில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

 கடந்த சில வருடங்களில் ஜல்லிக்கட்டுப் பல பிரச்னைகளுக்கு இடையே நடக்காமலும், ஏகப்பட்ட கெடுபிடியுடனும் நடத்தப்படாததால் உறவுக்காரர்களை விருந்துக்கு அழைக்க முடியாமல் மிகவும் மனம்நொந்து போயிருந்த மதுரை மாவட்ட மக்கள், இம்முறை அனைவரையும் மகிழ்ச்சியுடன் அழைத்துள்ளனர். இது மட்டுமல்லாமல், சென்னை மக்கள் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அதிகம் பங்கு பெற்றதால், அவர்களும் ஜல்லிக்கட்டைக் கண்டுகழிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் வருகிற 7-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர் செய்துவருகிறார்.  ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மதுரை மக்கள் துள்ளிக்கொண்டு தயாராகிவிட்டார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்