தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காதது ஏன்? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசு அறிவித்தபடி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை அமைக்காதது ஏன் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2015-16 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 2,000 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2017-18-ம் ஆண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு செயல்வடிவம் பெற்றுவிட்டது.

ஆனால், அதற்கு முன்பே தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமையாமல் இருப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் நடத்தும் கபட நாடகமே காரணம். 3 ஆண்டுகள் கடந்தும், மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு இன்றுவரை அமலுக்கு வராமல் நிலுவையில் வைக்கப்பட்டு இருப்பது, தமிழக மக்களின் நலன் மீது பா.ஜ.க அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல், அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!